

சென்னை: ‘முள்ளக்காடு பகுதியில் உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களை பாதிக்கும் கப்பல் கட்டும் தளத் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும்’ என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “தூத்துக்குடி அருகே முள்ளக்காடு பகுதியில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீட்டில் சிப்காட் மூலம் பசுமைத்தள கப்பல் கட்டும் தளம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.
இந்தத் திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட உள்ள பகுதிகளில் பெரும்பாலானவை அரசு புறம்போக்கு நிலங்களாக உள்ள நிலையில், 100 ஆண்டுகளுக்கும் மேலாக உப்பு உற்பத்தியாளர்கள் அரசு அனுமதியுடன் குத்தகைக்கு எடுத்து உப்பளங்களை நடத்தி வருகின்றனர். ஆயிரக்கணக்கான உப்பு உற்பத்தியாளர்களும், தொழிலாளர்களும் தங்களளின் வாழ்வாதாரத்துக்கு இதையே நம்பியுள்ளனர்.
இந்நிலையில், கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்காக உப்பள நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. ஒரு தொழிலை அழித்து மற்றொரு தொழிலை உருவாக்குவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
உப்பளங்கள் அழிக்கப்பட்டால், உப்பு உற்பத்தியாளர்கள் மட்டுமின்றி, அதனை நம்பி வாழும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே, உப்பள நிலங்களைக் கையகப்படுத்தி கப்பல் கட்டும் தளம் அமைக்கும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.