

சென்னை: “மத்திய அரசு தொகுதி மறுவரையறை திருத்த மசோதாவை இன்னும் கொண்டுவராத நிலையில் அந்த மசோதா குறித்து தீர்மானம் நிறைவேற்றுவது எந்த அடிப்படையில் சரியாக இருக்கும்” என்று சட்டப்பேரவையில் தேமுதி பொதுச் செயலாளரும், விருதாச்சலம் எம்எல்ஏவுமான பிரேமலதா விஜயகாந்த் வினவினார்.
தமிழக சட்டப்பேரவை இன்று (ஆக.12) காலை கூடியதும் முதல்வர் விஜய் தொகுதி மறுவரையறைக்கு எதிராக தனித் தீர்மானம் கொண்டுவந்தார். அந்தத் தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் பேசினர்.
தேமுதிக பொதுச் செயலாளரும், விருதாச்சலம் எம்எல்ஏவுமான பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது: தொகுதி மறுவரையறை தொடர்பான சட்ட மசோதா இதுவரையிலும் மத்திய அரசால் கொண்டு வரப்படவில்லை. அப்படி இருக்கையில், அந்த மசோதா குறித்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவது என்பது எந்த அடிப்படையில் சரியாக இருக்கும்?
தமிழகத்தை விட பல்வேறு மாநிலங்களிலும் மக்கள்தொகை அதிகமாகி இருக்கிறது. அந்தக் காரணத்தினாலேயே தமிழகத்தில் எம்பிக்கள் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது.
எனவே, மத்திய - மாநில அரசுகள் கலந்து எல்லா மாநிலங்களுக்கும் 50% நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை கணிசமாக உயரும் வகையில் தொகுதி மறுவரையறை மசோதாவைக் கொண்டுவர வேண்டும். அப்பொழுதுதான் தமிழகத்திலும் எம்பிக்கள் எண்ணிக்கை உயரும்.
அப்படிச் செய்யும்போது 543 எம்பிக்கள் இருக்கின்ற இடத்தில் 815 எம்பிக்கள் ஆக எண்ணிக்கை உயர வாய்ப்பாக அமையும். தமிழகத்தில் மொத்தம் 39 எம்.பி.க்கள் மட்டுமே இருக்கின்றனர். தொகுதி மறுவரையின் மூலமாக நிச்சயமாக தமிழகத்துக்கு 59 எம்.பி.க்கள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன.
அதனால், நாடாளுமன்றத்தில் தமிழகத்துக்கான 7.2% விகிதாச்சாரம் குறையாமல் நம் மக்களின் பிரச்சினையை பேச முடியும். இன்றைய சூழ்நிலையில் 10 லட்சம் மக்களுக்கு ஒரு எம்.பி என்றளவில்தான் நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ளது. தொகுதி மறுவரையறை செய்வதன் மூலமாக, 7 லட்சத்திலிருந்து 8 லட்சம் மக்களுக்கு ஒரு எம்.பி வீதமாக எண்ணிக்கை உயரலாம்.
அதேபோல், பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு தர வேண்டும் என்ற தீர்மானத்தை ஒரு பெண் உறுப்பினராக, தேமுதிக பொதுச்செயலாளராக, ஒட்டுமொத்த பெண்கள் சார்பாக நான் வரவேற்கிறேன். இன்னும் இந்த விகிதாச்சாரம் அதிகமாக வேண்டும் என்பதையும் இந்த நேரத்தில் நான் கேட்டுக்கொள்கிறேன்.
ஆகையால் மத்திய அரசு சட்ட முன்வடிவு கொண்டுவந்த பின்னரே தொகுதி மறுவரையறை பற்றி நாம் ஆய்வு செய்வது சிறப்பாக இருக்கும் என்ற என் கருத்தைக் கூறுகிறேன். இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.