

பிரேமலதா விஜயகாந்த்
கடலூர்: தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
விருத்தாசலம் தொகுதி கொட்டாரக்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, ஆலடி அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிரேமலதா எம்எல்ஏ ஆய்வு செய்தார். ஆசிரியர்கள், மாணவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து மாணவர்களுடன் மத்தாப்பு கொளுத்தி தீபாவளியை கொண்டாடினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: செஞ்சியில் சிறுமி காணாமல் போய் 23 நாட்கள் ஆகிவிட்டன. அந்தக் குழந்தையின் நிலை குறித்து சின்ன ஆதாரங்கள்கூட கிடைக்கவில்லை. ஸ்காட்லாந்து போலீஸாருக்கு இணையாக பேசப்பட்ட தமிழக போலீஸார், இன்று காணாமல் போன ஒரு குழந்தையை கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறார்கள்.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நான் ஆய்வு செய்த பிறகு, உடனடியாக நெல் மூட்டைகள் கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இன்னும் சில கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைகளில் நெல் முளைத்து வருகிறது. அரசு அவற்றையும் உடனடியாக கிடங்குகளுக்கு கொண்டு செல்ல வேண்டும்.
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு கெட்டுவிட்டது. அது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. ஒரு கிலோ அரிசி ரூ.100-க்கு விற்கப்படுகிறது. இதுவரை தமிழகத்தில் இவ்வளவு பெரிய விலை உயர்வை பார்த்ததில்லை. அரிசியில் தொடங்கி பெட்ரோல், டீசல், அத்தியாவசிய பொருட்கள் என அனைத்தும் விலை உயர்ந்துவிட்டது.
எம்எல்ஏ தொகுதி நிதி ஒதுக்கப்படவில்லை. ஒதுக்கினால் அந்த நிதியில் மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கத் தயாராக உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.