தமிழகத்தில் தொடர் மின்வெட்டு: தலைவர்கள் கண்டனமும், அமைச்சர் விளக்கமும்

தமிழகத்தில் தொடர் மின்வெட்டு: தலைவர்கள் கண்டனமும், அமைச்சர் விளக்கமும்
Updated on
2 min read

சென்னை: மக்கள் நடுத்தெருவில் இறங்கி போராடுவது வேதனை அளிக்கிறது என தமிழகத்தில் நிகழும் தொடர் மின்வெட்டுக்கு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதேவேளையில், ‘மின்வெட்டு பிரச்சினையில் ஒரு சிலரின் தூண்டுதலின் பேரில் சாலைகளில் போராட்டம் நடத்தப்படுகிறது’ என்று அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிக்கையில், “அம்பத்தூர், பெரம்பூர், அரும்பாக்கம், மாங்காடு, மேடவாக்கம் உள்ளிட்ட சென்னையின் பெரும்பாலான முக்கியப் பகுதிகளில் 8-ம் தேதி இரவு முழுவதும் பல மணி நேரம் நீடித்த தொடர் மின்வெட்டால் பொதுமக்களை பெரும் அவதிக்குள்ளாகியுள்ளது முதல்வர் விஜய்யின் நிர்வாகத் தோல்விக்கான சான்று.

ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் என்று வாக்குறுதியளித்த தவெகவின் பொய்களை நம்பி வாக்களித்த மக்கள், கோடை வெப்பம் பொறுக்க முடியாமல் குழந்தை குட்டிகளுடன் இன்று நடுத்தெருவில் இறங்கி மின்சாரத்துக்காக போராடுவது மிகுந்த வேதனையளிக்கிறது” என்று அவர் கூறியுள்ளார்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மட்டுமே மின்வெட்டு இருப்பதாகவும் அறிவிக்கப்படாத மின்வெட்டு இருக்காது எனவும் அமைச்சர்கள் என்றைக்குச் சொன்னார்களோ, அன்று முதலே தமிழகம் முழுவதும் அறிவிக்கப்படாத பல மணி நேர மின்வெட்டுகள் தொடர்வது, தவெக அரசு சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்பதை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது” என்று கூறியுள்ளார்.

தவாக தலைவர் தி.வேல்முருகன், “தமிழக அரசு தொடர்ச்சியாக நடைபெற்று வரும் மின்வெட்டுகள் தொடர்பான உண்மையான காரணங்களை வெளிப்படையாக மக்களிடம் அறிவிக்க வேண்டும்.

மேலும், மாவட்ட வாரியான மின்சார உற்பத்தி, தேவை மற்றும் விநியோகம் குறித்த முழுமையான தகவல்களை பொதுமக்களின் பார்வைக்கு கொண்டு வர வேண்டும். அத்துடன், தொழில் நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் மின்சார விநியோக விவரங்களையும் வெளிப்படையாக வெளியிட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

அமைச்சர் நிர்மல் குமார் கூறுவது என்ன?

மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் கூறுகையில், “மின் துறையில் முதலீட்டாளர்களுக்கு முழுமையாக ஒத்துழைப்புகளை வழங்கி வருகிறோம். முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கும் விஷயங்களை இந்த அரசு செய்து தரும். மின்னுற்பத்தி மட்டும்தான் தனியாருக்கு செல்லும் மற்ற அனைத்து கட்டமைப்புகளும் தமிழக மின் வாரியத்திடம் இருக்கும்.

இரவு எங்கெல்லாம் மின்தடை ஏற்பட்டுள்ளது. எவ்வளவு நேரத்தில் சரி செய்யப்படுகிறது என கேட்டறிந்து வருகிறேன். ஒவ்வொரு நிமிடமும் எதனால் மின்வெட்டு ஏற்படுகிறது என்பதற்கான காரணத்தை சொல்கிறோம். ஒரு சிலர் வேண்டுமென்றே ஃபியூசை பிடுங்கி மின்வெட்டை ஏற்படுத்துகிறார்கள். அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிசிடிவி இருந்ததால் ஒரு சிலர் மட்டும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். பெரம்பூரில் 2 தெருவில் தொடர்ச்சியாக மின்வெட்டு ஏற்படுகிறது. வேண்டுமென்றே சிலர் மின்வெட்டை ஏற்படுத்துகிறார்கள். ஒரு சிலரின் தூண்டுதலின் பேரில் சாலைகளில் போராட்டம் நடத்தப்படுகிறது.

வேண்டுமென்று மின்வெட்டு ஏற்படுத்தும் நபர்களைக் கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பொதுமக்களும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். சிசிடிவி இல்லாத இடங்களில் பொதுமக்கள் சந்தேகப்படும் நபர்கள் குறித்து தெரிவிக்க வேண்டும். மின்னகம் மூலமாகவும் சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் வரக்கூடிய புகார்களுக்கு உடனடி தீர்வு காணப்படுகிறது. மின் துறையில் உள்ள அனைத்து பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகிறார்கள். இரவு கண்காணிப்புப் பணியில் அதிக நபர்கள் உள்ளனர்” என்றார்.

தமிழகத்தில் தொடர் மின்வெட்டு: தலைவர்கள் கண்டனமும், அமைச்சர் விளக்கமும்
பொதுப் பணித் துறை செயலர் உட்பட 8 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in