“கல்விக்கு வறுமை தடையாக இருக்கக்கூடாது” - தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான ஆசிரியர் தங்கராஜ் பேட்டி

“கல்விக்கு வறுமை தடையாக இருக்கக்கூடாது” - தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான ஆசிரியர் தங்கராஜ் பேட்டி
Updated on
2 min read

தென்காசி: மாணவர்களின் கல்விக்கு வறுமை ஒருபோதும் தடையாக இருக்கக்கூடாது என்ற எண்ணத்தில், பொதுமக்கள், முன்னாள் மாணவர்கள், நண்பர்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் உதவிகளை ஒருங்கிணைத்து பள்ளிக்குத் தேவையான பல்வேறு வசதிகளை ஏற்படுத்தியதாகக் கூறுகிறார் தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் தங்கராஜ்.

ஒவ்வோர் ஆண்டும் சிறந்த ஆசிரியர்களை பெருமைப்படுத்தும் வகையில் செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினத்தன்று இந்திய குடியரசுத் தலைவரால் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, இந்தியக் குடியரசுத் தலைவரால் வழங்கப்படும் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழ்நாட்டின் புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியர் தங்கராஜ் மற்றும் மதுரை, பிஎம் ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியை அமுதா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தங்கராஜ் கல்விக்கு வறுமை ஒருபோதும் தடையாக இருக்கக் கூடாது என்று கூறுகிறார்.

தனது கல்விப் பணி குறித்து ஆசிரியர் மு.தங்கராஜ் கூறும்போது, “சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதுடன், அவர்களின் கல்வி வளர்ச்சிக்கு தேவையான பள்ளிக் கட்டமைப்பு, நவீன கற்றல் வசதிகள், விளையாட்டு மற்றும் இணைச் செயல்பாடுகளை மேம்படுத்த தொடர்ந்து பணியாற்றி வருகிறேன்.

மாணவர்களின் கல்விக்கு வறுமை ஒருபோதும் தடையாக இருக்கக்கூடாது என்ற எண்ணத்தில், பொதுமக்கள், முன்னாள் மாணவர்கள், நண்பர்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் உதவிகளை ஒருங்கிணைத்து பள்ளிக்குத் தேவையான பல்வேறு வசதிகளை ஏற்படுத்தியுள்ளேன்.

பள்ளியில் டிஜிட்டல் கற்றலை மேம்படுத்த ஸ்மார்ட் தொலைக்காட்சிகள், புரொஜெக்டர், ஆண்ட்ராய்டு தொலைக்காட்சிகள், இன்டராக்டிவ் போர்டு உள்ளிட்ட நவீன கற்றல் சாதனங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாணவர்களின் அடிப்படைத் தேவைகளை கருத்தில் கொண்டு கழிப்பறை வசதி உள்ளிட்ட பள்ளிக் கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாணவர்கள் பாடத்தை மனப்பாடம் செய்வதைவிட, அதை மகிழ்ச்சியுடன் புரிந்துகொண்டு கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே எனது கற்பித்தல் அணுகுமுறை. கதை சொல்லுதல், விளையாட்டு வழிக் கற்றல், கலை ஒருங்கிணைந்த கற்றல், செயல்பாடுகள், குழு கற்றல், ஆராய்ந்து கற்றல் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் போன்ற முறைகளைப் பயன்படுத்தி பாடங்களை மாணவர்களுக்கு எளிமையாகவும் சுவாரஸ்யமாகவும் கற்பித்து வருகிறேன்.

தமிழ், ஆங்கிலம், கணிதம், சுற்றுச்சூழல் அறிவியல் உள்ளிட்ட பாடங்களை மாணவர்களின் வயதுக்கும் புரிதல் திறனுக்கும் ஏற்ற வகையில் செயல்வழிக் கற்றல் முறையில் கற்பிக்கிறேன். Flash Cards, Alphabet Cards, Phonics Cards, Sentence Strips, Story Books மற்றும் Audio Visual கருவிகள் போன்ற கற்றல் வளங்களையும் பயன்படுத்துகிறேன். மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்காக கல்வியுடன் மட்டும் நின்றுவிடாமல், யோகா, சதுரங்கம், கேரம், சிலம்பம், கபடி, கோ-கோ, கயிறு இழுத்தல், நடனம் உள்ளிட்ட விளையாட்டு மற்றும் கலைச் செயல்பாடுகளுக்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறேன்.

ஒவ்வொரு மாணவரும் தன்னம்பிக்கையுடன் வளர வேண்டும். அவர்களின் குடும்பச் சூழல் அல்லது பொருளாதார நிலை கல்விக்கு தடையாக இருக்கக்கூடாது. பள்ளி என்பது பாடப்புத்தக அறிவை மட்டும் வழங்கும் இடமாக இல்லாமல், மாணவர்களின் திறமை, சிந்தனை, படைப்பாற்றல், ஒழுக்கம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வை வளர்க்கும் இடமாக இருக்க வேண்டும் என்பதே எனது கல்விப் பணியின் அடிப்படை நோக்கம். மாணவர்களின் கல்வி வளர்ச்சியோடு பள்ளியின் வளர்ச்சியும், பள்ளியோடு சமூகத்தின் வளர்ச்சியும் இணைந்திருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன்.

இந்தப் பணிகளையும், மாணவர்களின் கல்வி மற்றும் முழுமையான வளர்ச்சிக்காக மேற்கொண்ட தொடர் முயற்சிகளையும் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு சார்பில் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியையும், மேலும் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்ற பொறுப்புணர்வையும் அளித்துள்ளது” என்றார்.

“கல்விக்கு வறுமை தடையாக இருக்கக்கூடாது” - தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான ஆசிரியர் தங்கராஜ் பேட்டி
திமுகவில் அதிரடி மாற்றங்கள்: மாவட்டச் செயலாளர்கள் 110 ஆக உயர்வு முதல் வயது வரம்பு வரை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in