

புதுச்சேரி: புதுச்சேரியில் அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடு ஓரிரு நாளில் வெளியாகும், என துணை நிலை ஆளுநர் தெரிவித்ததாக எதிர்க்கட்சித் தலைவர் நாஜிம் தெரிவித்துள்ளார்.
புதுவையில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, அதிமுக, லஜக கூட்டணி 18 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைத்தது. முதல்வராக ரங்கசாமியும், பாஜகவை சேர்ந்த நமச்சிவாயம், ராஜசேகர், என்.ஆர்.காங்கிரஸை சேர்ந்த மல்லாடி கிருஷ்ணாராவ், ராஜவேலு, சிவகொழுந்து ஆகியோர் அமைச்சர்களானார்கள். ஆனால், இவர்கள் இலாகா இல்லாத அமைச்சர்களாக உலா வருகின்றனர்.
அனைத்து துறைகளின் பொறுப்புகளையும் முதல்வர் ரங்கசாமியே நிர்வகித்து வருகிறார். இலாகா இல்லாததால் அமைச்சர்கள் சட்டப்பேரவைக்கும் பெரும்பாலும் வருவதில்லை. இந்த நிலையில் கடந்த 20-ம் தேதி முதல்வர் ரங்கசாமி, துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனை சந்தித்து அமைச்சர்களுக்கு இலாகா பட்டியலை வழங்கினார். வழக்கமாக ஆளுநரிடம் வழங்கப்பட்ட இலாகா பட்டியல் அதிகபட்சமாக 2 மணி நேரத்தில் அரசிதழில் வெளியிடப்படும்.
ஆனால் இன்று வரை 10 நாட்களை கடந்தும் இதுவரை அமைச்சர்களுக்கு இலாகா அறிவிக்கப்படவில்லை. இதற்கு இலாகாவை பிரிப்பதில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக இடையில் ஏற்பட்டுள்ள மோதல்தான் காரணம் எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் நாஜிம் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் செந்தில்குமார், செந்தில், விக்னேஷ் கண்ணன், கார்த்திகேயன் ஆகியோர் லோக் நிவாசில் துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதனை இன்று சந்தித்தனர். அப்போது அரசு நிர்வாக முடக்கத்தை தவிர்க்க அமைச்சர்களுக்கு இலாகாவை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
ஆளுநரை சந்தித்த பிறகு எதிர்க்கட்சித் தலைவர் நாஜிம் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கப்படாத குறையை சுட்டிக்காட்டினோம். எப்போது இலாகா ஒதுக்கீடு அறிவிப்பு வெளிவரும் எனக் கேட்டோம். அதற்கு துணைநிலை ஆளுநர், “நிர்வாகம் முடங்கவில்லை. இலாகா ஒதுக்கீடு ஓரிரு நாளில் வெளியாகும்.” என்றார்.
இலாகா ஒதுக்கீடு நாளைக்கே வந்துவிடும் என்ற தொனியில் சொன்னார். ஓரிரு நாட்கள் காத்திருப்போம். போராட வேண்டிய அவசியம் இருக்காது என நினைக்கிறோம். மக்கள் மீதான அக்கறை காரணமாக முதல்வரிடம் கேட்டபோது அதை ஆளுநரிடம் தந்துவிட்டதால் இங்கு வந்து கேட்டோம்.
முதல்வரும், ஆளுநரும் நிர்வாகம் முடங்கவில்லை என்றனர். ஆனால் நிர்வாகம் முடங்கிவிட்டதால் கேட்டோம். இலாகா அனுமதி தராத காரணத்தை ஆளுநர் சொல்லவில்லை. அழுத்தம் தந்துள்ளோம். ஆளுநர் சொன்ன வார்த்தையை நம்புகிறோம்” என்றார்.