

விழுப்புரம்: சர்ச்சைப் பேச்சு தொடர்பான வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி மீண்டும் மன்னிப்பு கேட்டார்.
முன்னாள் அமைச்சர் பொன்முடி நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, பெண்களுடன் - சைவம் வைணவத்தை ஒப்பிட்டு சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு பரவலாக கண்டனம் எழுந்த நிலையில் அவரிடம் இருந்து அமைச்சர் பதவி மற்றும் கட்சியின் துணை பொதுச் செயலாளர் பதவிகள் பறிக்கப்பட்டன.
இந்நிலையில் இந்த சர்ச்சை பேச்சு தொடர்பான வழக்கு, எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் கடந்த ஆக. 6-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது பொன்முடி ஆஜராகாததால், அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, ஆக. 7-ம் தேதி நீதிமன்றத்தில் பொன்முடி ஆஜரானார். அதன்பிறகு, பிடிவாரண்ட் உத்தரவு திரும்ப பெறப்பட்டு வழக்கு 28-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில் விழுப்புரத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பொன்முடி, “நான் பேசியது தவறாக இருந்தால், அனைவரும் என்னை மன்னித்து விடுமாறு கேட்டுக்கொண்டேன். இந்த வழக்கை தொடர்ந்த சகோதரியிடமும் வருத்தத்தையும், மன்னிப்பையும் கோரியிருந்தேன். உளமாற வருத்தத்தையும், மன்னிப்பையும் மீண்டும் கேட்டுக்கொள்கிறேன். இதுபோன்று இனிமேல் நிச்சயமாக பேசுவதற்கு வாய்ப்பில்லை” என்றார்.