

சென்னை: பெசன்ட்நகர் கொலை சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த அரசியல் கட்சித் தலைவர்கள், “கொலைக் குற்றங்கள் அதிகரிப்பது ஆட்சியின் தோல்வியாக கருதப்படும்” என தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்: காவல்துறை மானியக் கோரிக்கை விவாதம் மீது முதல்வர் பதிலுரை அளிப்பதற்கு முன்பாகவே, அவரது கட்சிப் பிரமுகர் ஒருவரே, சென்னையில் கொலைக்கு ஆளாகியுள்ளார். அதுவும் சாலையில் ஓட, ஓட விரட்டி கொல்லப்பட்டுள்ளார்.
இதுதான் தமிழகத்தின் ‘வெற்றி சட்டம்-ஒழுங்கு’ நிலை. சென்னை சாலையில் இப்படி ஒரு கொலை நடக்கும் அளவுக்கு சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு போயிருப்பதை நினைத்து வருந்துவதா அல்லது சரித்திரப்பதிவேடு குற்றவாளிகள் எல்லாம் தஞ்சமாகும் வகையில் தவெக இருப்பதை நினைத்து வருந்துவதா? இதற்கும் திமுகவை எப்படி குற்றம் சொல்லலாம் என யோசிப்பதை நிறுத்திவிட்டு, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.
பாமக தலைவர் அன்புமணி: சென்னை பெசன்ட் நகரில் ஆளும் தவெகவின் நிர்வாகியும், கொலை உள்ளிட்ட குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட வருமான கண்ணன் என்பவரை, ஒரு கும்பல் வெட்டி படுகொலை செய்திருப்பதும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கொலை, கொள்ளைகளை தடுக்க எந்த நடவடிக்கையும் அரசு மேற்கொள்ளவில்லை என்பதையே இந்நிகழ்வுகள் காட்டுகின்றன. கொலைக் குற்றங்கள் அதிகரிப்பது ஆட்சியின் தோல்வியாகவே கருதப்படும். இத்தகைய குற்றங்கள் இனியும் நடக்காத வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன்: தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. தமிழக அரசு சட்டம் - ஒழுங்கு பிரச்சினை குறித்து வெறும் விளக்கங்களை மட்டுமே அளித்து வருவதை விட்டுவிட்டு மக்களின் உயிருக்கும், உடைமைகளுக்கும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
காவல் துறை, குற்றம் நடந்த பின்னர் கைது செய்வது போன்ற நடவடிக்கைகளை எடுப்பது மட்டும் போதாது. குற்றங்கள் நடைபெறுவதற்கு முன்பே அவற்றை தடுக்கும் வகையில் செயல்பட வேண்டும். போதை மற்றும் மது கலாச்சாரத்துக்கு எதிராக விழிப்புணர்வு பரப்புரை இயக்கத்தை தமிழக அரசு நடத்த வேண்டும்.
ஐஜேகே தலைவர் ரவிபச்சமுத்து: சென்னையில் தவெக நிர்வாகி கண்ணன் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும், மக்களின் பாதுகாப்பு குறித்த கவலையையும் ஏற்படுத்துகிறது. தமிழகத்தில் தொடரும் கொலை, கொள்ளை, பொதைப்பொருள் குற்றச்சம்பவங்கள் பொதுமக்களிடையே பாதுகாப்பு குறித்த அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளன.
இச்சூழல் மிகவும் கவலைக்குரியது. இவற்றை தடுக்க காவல்துறை ஏஐ தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.