

தாராபுரம்: தாராபுரம் சட்டப்பேரவை தொகுதிக்கு அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தொகுதியின் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் வைத்துள்ள ‘தேர்தல் புறக்கணிப்பு’ அறிவிப்பு பதாகைகள் அரசியல் கட்சியினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
தாராபுரம் வினோபா நகர் பகுதியில் குடியிருப்புவாசிகள் வைத்துள்ள அறிவிப்பு பதாகையில், ‘‘கடந்த 25 ஆண்டுகளாக குடிநீர், மழைநீர் வடிகால், தார்ச்சாலை உள்ளிட்ட அடிப்படை வசதி செய்யக்கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, இந்த இடைத்தேர்தலைப் புறக்கணிக்கிறோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, சின்னக்காம்பாளையம் 6-வது வார்டு பொதுமக்கள் சார்பில் வைக்கப்பட்டுள்ள பதாகையில், ‘‘ஆட்சி மாறியாச்சு.. காட்சிகள் மாறவில்லை" என்ற தலைப்பில் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அதில், ‘‘தனியார் கோழிப்பண்ணையால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது.
இதுகுறித்து கடந்த 5 ஆண்டுகளாகப் போராடியும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தவறான அறிக்கை சமர்ப்பித்து கோழிப்பண்ணைக்கு அனுமதி வழங்கியுள்ளது. எனவே, அந்த அனுமதியை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி தேர்தலைப் புறக்கணிக்கிறோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வாக்குச் சேகரிப்பிற்காக கிராமங்களுக்குச் செல்லும் அரசியல் கட்சியினருக்கு, தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்புகள் பெரும் தலைவலியை உருவாக்கியுள்ளன.