

கோப்புப் படம்
சேலம்: வேட்புமனு தாக்கலுக்கே 2 வார காலம் அவகாசம் இருப்பதால், இப்போதே பிரச்சாரத்தை தொடங்கினால் செலவு அதிகமாகிவிடும் என்று சேலம் மாவட்டத்தில் அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் களமிறங்காமல் அமைதியாக இருக்கின்றன.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி 15-ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டன. இந்நிலையில், தேர்தல் என வந்துவிட்டாலே அனல் பறக்கும் பிரச்சாரங்களில் அரசியல் கட்சிகள் இறங்கிவிடும்.
வேட்பாளர்களின் பெயரை அறிவித்து, அவரது கட்சிக்கு வாக்களிக்க வலியுறுத்தி வாகனங்களில் ஒலிபெருக்கிகளை வைத்து, தெருத்தெருவாக பிரச்சாரம் செய்வது, வேட்பாளர் குறித்த விளம்பரம் செய்வதற்கு சுவர்களை முன்பதிவு செய்து வைப்பது, துண்டுப் பிரசுரங்களை அள்ளி வீசுவது என தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும்.
ஆனால், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னரும், தமிழகத்தில் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி தொகுதிப் பங்கீடு முடியாமல் இருப்பதால், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என எந்தக்கட்சியின் கூட்டணியிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.
மேலும், புதிய கட்சிகள் சிலவற்றில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டாலும், எவரும் பிரச்சாரத்தில் களமிறங்காமல் அமைதியாக இருக்கின்றனர்.
இது குறித்த அரசியல் கட்சியினர் கூறியதாவது: ஒவ்வொரு தொகுதியிலும் தற்போது எம்எல்ஏ-வாக இருப்பவர்களுக்கு, மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.
மேலும், எம்எல்ஏ-வாக இருப்பவரின் தொகுதி, கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்படவும் வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில், கட்சிகளிடையே கூட்டணிப் பங்கீடே இன்னமும் முடிவாகவில்லை.
அதன் பின்னர் தான் தொகுதி ஒதுக்கீடு செய்யப்படும். மேலும், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி ஆகியவற்றில், புது முகங்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என்று தகவல்கள் வருகின்றன.
எனவே, சீட் கிடைப்பது உறுதியான பின்னரே, தேர்தல் பிரச்சாரத்துக்கு செலவழிக்க வேண்டும் என்று எல்லோரும் காத்துள்ளனர். மேலும், வேட்புமனு தாக்கல் வரும் 30-ம் தேதி தான் தொடங்க உள்ளது.
சுமார் 2 வார கால அவகாசம் இருக்கும் நிலையில், இப்போதே பிரச்சாரத்துக்கு செலவு செய்துவிட்டால், தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டால், கடைசி நேரத்தில் பிரச்சாரம் செய்வதற்கு செலவு செய்ய முடியாத நிலை ஏற்படும். எனவே, பொறுமையாக பிரச்சாரத்தை தொடங்கலாம் என காத்திருக்கிறோம், என்றனர்.
இதனிடையே, 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம், பேரணி, இருசக்கர வாகன பேரணி என தேர்தல் ஆணையம் தேர்தலுக்கான பிரச்சாரத்தை முடுக்கிவிட்டுள்ளது.
மேலும், ஒவ்வொரு தொகுதியிலும் பறக்கும் படை சோதனை, நிலைக்குழு கண்காணிப்பு என தேர்தல் ஆணையம் மட்டுமே, இப்போது தேர்தல் களத்தில் பரபரப்பாக இயங்கிக் கொண்டுள்ளது.