“தேனிசைத் தென்றல் வீசுவது நிற்காது...” - தேவா மறைவுக்கு ஸ்டாலின், பழனிசாமி, தலைவர்கள் புகழஞ்சலி

தேவா 

தேவா 

Updated on: 
4 min read

சென்னை: தேனிசைத் தென்றல் தேவா மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பதிவில், “தேனிசைத் தென்றல் தேவாவின் மறைவுச்செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானேன். பொறாமை, வஞ்சகம், சூதுவாது ஏதுமறியாத வெள்ளை மனம் கொண்டவர் தேவா. கானா வகைமைப் பாடல்களைத் திரையிசையில் பெரிய அளவில் புகுத்தி, கானா என்றாலே தேவாதான் என அறியப்பட்டவர்.

எளிமையான கிராமத்துப் பின்னணியில் இருந்து சென்னைக்கு வந்து, தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்து எத்தனையோ பேருக்கு ஆதர்சமாகத் திகழ்ந்தவர். உச்ச நட்சத்திரங்கள் அனைவரது திரைப்படங்களுக்கும் இசையமைத்து, அவற்றின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர்.

குறிப்பாக, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடன் தேவா இணைந்து பணியாற்றிய அண்ணாமலை, பாட்ஷா, அருணாசலம் ஆகிய திரைப்படங்களின் பாடல்கள் பெருவெற்றியை ஈட்டின.

இன்றளவும், தேவா இசையோடுதான் ரஜினிகாந்த் பெயர் திரையில் தோன்றுகிறது என்பதில் இருந்தே அதன் வீச்சை உணர்ந்துகொள்ளலாம். நான் ஆட்டோக்காரன் ஒலிக்காத ஆட்டோ ஸ்டாண்டுகளே தமிழகத்தில் இருக்காது. கலைஞானி கமலஹாசனின் அவ்வை சண்முகி, பஞ்சதந்திரம் போன்ற நகைச்சுவைப் படங்களிலும் தனது முத்திரையைப் பதித்துள்ளார்.

ரஜினி, கமல் மட்டுமல்லாமல், கேப்டன் விஜயகாந்துக்கும் ‘பாசமுள்ள பாண்டியரே’ உள்ளிட்ட பல வெற்றிப்பாடல்களை தேவா அளித்திருக்கிறார். குறிப்பாக, ‘வாராரு அழகர் வாராரு’ என்ற தேவாவின் பாடல் இல்லாத சித்திரைத் திருவிழாவை மதுரைக்காரர்களால் நினைத்துப் பார்க்கவே முடியாது.

நாயகர்களுக்கான மாஸ் பாடல்கள் மட்டுமின்றி, மனதை வருடும் மெல்லிசைப் பாடல்களிலும் தேவாவுக்கு நிகர் தேவாதான். ஆசை, காதல் கோட்டை, கண்ணெதிரே தோன்றினாள், காலமெல்லாம் காதல் வாழ்க, ஆஹா என நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் மெல்லிசையை தேவா தந்துள்ளார். முன்னாள் முதல்வர் கருணாநிதிதான், தேவா இசையின் இனிமையை மெச்சி 'தேனிசைத் தென்றல்' என்ற பட்டத்தை அவருக்கு வழங்கினார்.

80-களில் தனது திரையிசைப் பயணத்தைத் தொடங்கிய அவர் இன்றைய இளைஞர்களான அனிருத் உள்ளிட்டோரின் இசையிலும் எந்தத் தலைக்கனமும் இல்லாமல் நட்புணர்வோடு பாடியுள்ளார். அண்மைக்காலமாக, அவரது இசைக் கச்சேரிகளும் எல்லா ஊர்களிலும் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன. தமிழ் வெகுசன இசை வரலாற்றை தேவா அவர்களை விடுத்துவிட்டு எவராலும் எழுத முடியாது. பல அத்தியாயங்களை அவருக்கென ஒதுக்கியாக வேண்டும்.

ஒருபுறம் இசைஞானி இளையராஜா, மறுபுறம் இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் கோலோச்சிய காலத்திலும் தேவா தனக்கெனத் தனிப்பாதை அமைத்து வெற்றி கண்டார். இசையில் வல்லவர் என்பதைத் தாண்டி, மிகவும் நல்லவர் என்ற பெயரையும் பழகிய அனைவரிடமும் பெற்றவர்தான் தேவா.

தேவா மண்ணை விட்டு மறைந்தாலும் அவரது தேனிசைத் தென்றல் வீசுவது நிற்காது. தேவாவை இழந்து வாடும் அவரது மகன் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, சகோதரர் முரளி உள்ளிட்ட குடும்பத்தினருக்கும், திரையுலக நண்பர்களுக்கும், தேவா அவர்களின் ரசிக நெஞ்சங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “பிரபல இசையமைப்பாளர் அன்புச் சகோதரர் “தேனிசைத் தென்றல்” தேவா உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். எளிய பின்னணியில் இருந்து வந்து, எளிய மக்களின் வாழ்வியலை தன் இசையால் பிரதிபலித்தவர் தேவா. மாஸ், மெல்லிசை, பக்தி என அனைத்து வகையான பாடல்களிலும் தனி முத்திரை பதித்தவர்.

தேவாவின் “கானா” பாடல்களுக்கு துள்ளாத கால்கள் இல்லை என்று சொல்லும் அளவிற்கு அனைவரின் உள்ளங்களிலும் நிறைந்திருக்கிறது அவருடைய இசை.

எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் மீது பெரும் மதிப்பும், நம் கழகத்தின் மீது பேரன்பும் கொண்ட சகோதரர் தேவா, நம் கழகத்திற்காக மெட்டமைத்த பிரச்சாரப் பாடல்கள் என்றைக்கும் அதிமுக தொண்டர்களின் இதயங்களில் தனித்த இடம் பெற்றவை. “தேனிசைத் தென்றல்” தேவா மறைவு என்பது ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.

அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும், திரைத் துறை மற்றும் இசைத் துறையைச் சார்ந்தோருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், “தமிழ்த் திரையுலகின் இசை ரசிகர்களின் இதயங்களில் நீங்கா இடம்பிடித்த ‘தேனிசைத் தென்றல்’ இசையமைப்பாளர் தேவா மறைவு மிகுந்த வேதனையையும் பேரதிர்ச்சியையும் அளிக்கிறது. அவரது மறைவால் இசையுலகம் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பைச் சந்தித்துள்ளது.

தனது தனித்துவமான இசையாலும், இனிமையான மெட்டுகளாலும், மக்கள் மனங்களில் என்றும் ஒலித்துக்கொண்டிருக்கும் எண்ணற்ற பாடல்களாலும் தமிழ் இசை உலகில் அழியாத தடம் பதித்தவர் தேவா .

அவரது இசை, தலைமுறைகள் பல கடந்தும் நம் நினைவுகளிலும் இதயங்களிலும் உயிர்ப்புடன் வாழும். அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், திரையுலகினருக்கும், இசை ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என தனது இரங்கலை பதிவு செய்துள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பகிர்ந்துள்ள இரங்கல் செய்தியில், “புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளரும், தேனிசைத் தென்றல் என்று போற்றப்பட்டவருமான தேவா உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

தமிழ்த் திரையுலகுக்கு இசையமைப்பாளர் தேவாவின் பங்களிப்பு மிகப்பெரியதாகும். எளிய பின்னணியிலிருந்து வந்த தேவா, தமிழ்த் திரையுலகை இசைஞானி இளையராஜா , இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் ஆட்சி செய்து கொண்டிருந்த நிலையில், தனக்கென்று ஓர் இடத்தைப் பிடித்து இசை சாம்ராஜ்யம் நடத்தியவர்.

தமிழ்த்திரையுலகின் முன்னணி நடிகர்கள் அனைவரின் படங்களுக்கும் இசையமைத்த சிறப்பு தேவாவுக்கு உண்டு. ரஜினிகாந்த், கமலஹாசன், இன்றைய முதல்வர் விஜய், அஜித் உள்ளிட்டோரின் ரசிகர்களால் கொண்டாடப்படும் அவர்களின் பெரும்பாலான பாடல்களுக்கு இசை அமைத்தவர் தேவா.

எளிய மக்களின் இசையான கானா இசையை திரையில் அறிமுகம் செய்தவரும் தேவா தான். சில நாள்களுக்கு முன்பு வரை திரைப்படங்கள், தொலைக்காட்சி சார்ந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர், திடீரென நம்மை விட்டு பிரிந்ததைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

கடந்த ஆண்டு கிட்டத்தட்ட இதே காலத்தில் அவரது சகோதரர் சபேஷ் மறைந்தது அவரை மனதளவில் கடுமையாக பாதித்திருந்தது. மிகவும் நல்ல மனிதரான தேவா மறைவு இசையுலகிற்கு பெரும் இழப்பு ஆகும். தேனிசைத் தென்றல் தேவாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், இசையுலகினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், “தமிழ்த் திரையுலகில் தனது தனித்துவமான இசையாலும், துள்ளல் மிகுந்த கானா பாடல்களாலும் கோடிக்கணக்கான மக்களின் மனங்களை வென்றவரும், ஏழை, எளிய மக்களின் வாழ்வியலுடன் தொடர்புடைய இசையை அமைத்து, ‘தேனிசைத் தென்றல்’ என அனைவராலும் போற்றப்பட்டவருமான பிரபல இசையமைப்பாளர் தேவா உடல்நலக்குறைவால் இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது.

திரைப்பட இசையமைப்பாளராக மட்டுமல்லாது, தமிழ் இசை ரசிகர்களின் நினைவுகளில் நீங்கா இடம்பிடித்த கலைஞராகவும் திகழ்ந்த தேவாவை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக திரையுலகத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவனின் திருவடிநிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.” என தனது புகழஞ்சலியை பதிவு செய்துள்ளார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் விடப்பட்டுள்ள இரங்கல் செய்தியில், “தேனிசை தென்றல் என்று ரசிகர்களால் அழைக்கப்படும், பிரபல தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் தேவா (வயது 75) உடல்நலக்குறைவு காரணமாக இன்று (17.10.2026) இயற்கை எய்தினார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த் திரைப்படங்களில் இசை அமைப்பாளராக செயல்பட்ட அவர், கானா பாடல்கள் மற்றும் அற்புதமான மெல்லிசைகளை வழங்கி வந்துள்ளார். பல கானா பாடல்களை எழுதி அவரே இசையமைத்து பாடியும் உள்ளார். ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்டோருக்கு பல வெற்றிப் பாடல்களை அளித்துள்ளார்.

1990-ல் சிறந்த இசையமைப்பாளருக்கான தமிழக அரசின் விருது, 1992-ல் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதைப் பெற்றுள்ளார். 1995-ல் ‘ஆசை’ திரைப்படம் தேவாவுக்கு மற்றொரு மாநில விருதை பெற்றுத்தந்தது.

இசையமைப்பாளர் தேவாவின் மறைவு தமிழ்த் திரையுலகிற்கு மட்டுமின்றி, தென்னிந்திய திரைத்துறைக்கே மிகப் பெரும் இழப்பாகும்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அவருக்கு ஆழ்ந்த அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறது. அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், ரசிகர்களுக்கு இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

<div class="paragraphs"><p>தேவா&nbsp;</p></div>
“தேவாவின் இசைப் பயணம் திரையிசை வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்” - முதல்வர் விஜய் புகழஞ்சலி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in