

சென்னை: ‘கர்நாடக அரசு மேகேதாட்டு அணை கட்டுவதை எதிர்க்க தமிழகத்துக்கு உரிமை இல்லை’ என்று அம்மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்திருப்பதற்கு தமிழக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கை:
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: டெல்டா உள்ளிட்ட பல மாவட்ட விவசாயிகள் மட்டுமின்றி 20 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் காவிரி ஆறு விளங்கி வருகிறது.
மேகேதாட்டுவில், காவிரியின் குறுக்கே அணை கட்டினால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகி விடும். மேகேதாட்டு அணை கட்டுவதை எதிர்க்க தமிழக அரசுக்கு உரிமையில்லை என்ற கர்நாடக துணை முதல்வரின் பேச்சு, தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே மிகப் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவ்விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக எடுப்பதுடன், அரசின் தெளிவான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: நடுவர் மன்றத் தீர்ப்பையும், உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் கர்நாடக அரசு மீறுவதை அனுமதிக்கக் கூடாது. உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கை தமிழக அரசு விரைவுபடுத்தி காவிரி உரிமையை நிலைநாட்ட வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன்: மேகேதாட்டு அணை கட்ட புதிய விரிவான திட்டம் மத்திய அரசிடம் வழங்கப்படும் என கர்நாடக துணை முதல்வர் தெரிவித்துள்ளார். இத்தகைய முயற்சியை கர்நாடக மாநிலம் உடனடியாகக் கைவிட வேண்டும். மேகேதாட்டு அணைத் திடடத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது.
பாமக தலைவர் அன்புமணி: மேகேதாட்டு அணை குறித்து கர்நாடக அரசு புதிதாக தயாரித்திருக்கும் திட்ட அறிக்கையை மத்திய நீர்வள அமைச்சகம் பெற்றுக்கொள்ளக் கூடாது.
அது மட்டுமின்றி, காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான வரைவு திட்ட அறிக்கை தயாரிக்க 2018-ம் ஆண்டில் அளித்த அனுமதியை ரத்து செய்யும்படி மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணையைக் கட்டி தமிழகத்தின் டெல்டா பகுதிகளைப் பாலைவனமாக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசின் முயற்சியை ஆரம்ப நிலையிலேயே முதல்வர் விஜய் தடுத்து நிறுத்த வேண்டும்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: தமிழக அரசு உடனடியாக கர்நாடக காங்கிரஸ் அரசோடு கண்டிப்போடு பேசி மேகேதாட்டுவில் அணை கட்ட முயற்சிக்கக் கூடாது என்பதை உறுதிபடத் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறி யுள்ளனர்.