

இலைக் கட்சிக்கு செல்வாக்கான தொகுதிகள் சிலவற்றை மலர் கட்சி மல்லுக்கட்டி கேட்பதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், தலைநகரில் இருக்கும் மலர் கட்சி மக்களுக்குச் சாதகமான ‘பீக்காக்’ தொகுதிக்கு இலைக் கட்சியில் இருக்கும் இரண்டு முன்னாள் மாண்புமிகுக்கள் மல்லுக்கட்டுகிறார்களாம். அதில் ஒருவர் 40 வருடங்களுக்கு முன்பே அந்தத் தொகுதியில் போட்டியிட்டு வென்ற ‘மதியான’ பெண் தலைவி.
இன்னொருவர் தென் புலத்தில் ‘கோட்டை’ தொகுதியில் போட்டியிட்டு வெற்றி - தோல்விகளை கலவையாகக் கண்ட ரிவர் பெயரின் ‘செல்வர்’. ‘பீக்காக்’ தொகுதி இலைக் கட்சிக்கு கிடைக்குமா... அப்படியே கிடைத்தாலும் முக்கிய தலைகளான இவர்கள் இருவரில் யாருக்கு கைகூடும் என்று தெரியவில்லை. அதேசமயம், இந்தத் தொகுதி தனக்குக் கிடைக்காவிட்டால் ‘மாத்தி யோசிக்க’ வேண்டி இருக்கும் என்று இவர்களில் ஒருவர் தனக்கு நெருக்கமானவர்கள் மத்தியில் செய்தியை கசியவிட்டு வருகிறாராம்.