

‘டர்னிங்’ மாவட்டத்தைச் சேர்ந்த இலைக் கட்சியின் ‘மணியான’ எக்ஸ் மாண்புமிகு கடந்த முறை தனது ‘பேட்டை’ தொகுதியை கோட்டைவிட்டு நின்றார். இதனால் இம்முறை எப்படியாவது ‘பேட்டை’க்கு ராஜா ஆகிவிடவேண்டும் என்பதில் கவனமாக காய் நகர்த்தும் அவரை, தொங்கலில் இருக்கும் வழக்கு தூக்கம் கெடுக்கிறதாம். வேட்பு மனுவில் ‘வேலையைக்’ காட்டியதாக அவர் மீது போடப்பட்ட அந்த வழக்கு விசாரணை விளிம்பில் இருக்கிறதாம்.
இதை தள்ளுபடி செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மணியான தலைவர் தாக்கல் செய்த வழக்கு ஒரு வாரம் முன்பு தள்ளுபடி ஆகிவிட்டது. அதனால், இந்த வழக்கின் விசாரணை சூடு பிடித்து எலெக்ஷன் திருவிழாவில் தனக்கு ஏழரையைக் கூட்டிவிடக் கூடாது என்று பதறுகிறாராம் தலைவர்.
அதனால், முன்பு கண்டும் காணாமல் ஒதுக்கி வைத்திருந்த காவித் தலைவர்களிடம் எல்லாம் இப்போது வலியப்போய் வழிகிறாராம். இந்த வழக்கை ஒன்றுமில்லாமல் செய்ய வேண்டும் அல்லது குறைந்தபட்சம் தேர்தல் முடியும் வரைக்காவது அடுத்த கட்ட விசாரணையை எடுக்காமல் இருக்க வேண்டும் என்பது தான் இப்போது மணியான தலைவரின் பணிவான மன்றாடலாய் இருக்கிறதாம்.
இதற்கு நடுவே, ஒருவேளை தீர்ப்பு தனக்கு திகில் கொடுக்கும்படியாக வந்தால் ‘பேட்டை’ தொகுதியில் தான் சொல்கிறபடியெல்லாம் ஆடும் ஒரு ‘நடிகரை’ நிறுத்தவும் ஆர்ப்பாட்டமின்றி அமைதியாக ஆடிஷன் நடத்திக் கொண்டிருக்கிறாராம்.