

மத்தியில் இரண்டு முறை ’மதிப்பான’ இடத்தில் இருந்த ‘கோல்டு’ காவித் தலைவருக்கு மாநிலத்திலும் ‘மாண்புமிகு’ இருக்கையில் அமர்ந்து பார்க்க ஆசை வந்துவிட்டதாம். ஏற்கெனவே ‘மவுன்ட்’ தலைவர் மாநிலத் தலைவராக இருந்த போது அவருக்கும் மிஸ்டர் ‘கோல்டு’க்கும் ஏழாம் பொருத்தமாக இருந்தது.
சொந்த மாவட்டத்தின் மாவட்டத் தலைவர் நியமனத்தில்கூட ‘கோல்டு’ தனக்கு வேண்டிய ஒருத்தருக்காக ரோடு போட்டு வைக்க, அந்தக் கோட்டை அழித்துவிட்டு இன்னொரு புதிய நபரை மாவட்டத் தலைவராக்கி விட்டார் ‘மவுன்ட்’ தலைவர். அதுமட்டுமல்லாது, மிஸ்டர் ‘கோல்டை’ மேடையில் வைத்துக்கொண்டே, “இளைஞர்களுக்கு வழிவிட்டு மூத்த முன்னோடிகள் ஒதுங்கிக் கொண்டால் தான் கட்சி வளரும்” என்று கருத்துச் சொன்னார் ’மவுன்ட்’.
இந்த நிலையில், இப்போதுள்ள மாநிலத் தலைவர் மிஸ்டர் ‘கோல்டு’ உடன் மிகவும் இணக்கமாக இருக்கிறாராம். இதைவைத்து. இம்முறை கடைக்கோடி ‘கோவில்’ தொகுதியில் சீட் வாங்கி எப்படியாவது பேரவைக்குள் போய்விட வேண்டும் என பேரவா கொண்டிருக்கிறாராம். ஒருவேளை, கூட்டணி ஆட்சி அமைந்தால் சீனியாரிட்டி அடிப்படையில் தனக்கு ‘மாண்புமிகு’ இருக்கை அதுவாகவே கிடைத்துவிடும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையும் அதற்கு முக்கியக் காரணமாம்.
மிஸ்டர் ‘கோல்டின்’ எண்ணச் சிறகுகள் இப்படி விஸ்தாரமாய் விரிந்து கொண்டிருக்க, “இவருக்கு சீட் கொடுத்தால் இருப்பதையும் விட்டுட்டு இருக்க வேண்டியது தான்” என்ற ரீதியில் இப்போதே தொகுதிக்குள் சொந்தக் கட்சியினரே முகாரி பாட ஆரம்பித்திருப்பது தனிக்கதை.