

ஹார்ஸ் பேர புகாரில் தூங்காநகரத்து இலைக்கட்சியின் ‘ராஜ’ புள்ளியை போகிற போக்கில் போட்டுக்கொடுத்துவிட்டார் அந்த ஊரின் வாகைக் கட்சி எம்எல்ஏ. ‘கோட்டாவில்’ தனக்குத்தான் அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த எம்எல்ஏ, அது கிடைக்காததால் பெருத்த ஏமாற்றம் அடைந்தார்.
இதனால், கட்சிப் பதவிகளுக்கும், வரப்போகும் தேர்தலில் கவுன்சிலர் சீட்டுக்கும் எம்எல்ஏ ஏகத்துக்கும் ‘எதிர்பார்ப்பதாக’ ஆடியோ ரிலீஸாகி வாரக் கணக்கில் ஓடியது. தெர்மகோல் சைன்டிஸ்ட் சொன்னது போலவே இலைக்கட்சி ‘ராஜாவும்’ வாகை எம்எல்ஏ-வும் மாமா - மாப்ள என்று உறவுமுறை வைத்து விளிக்குமளவுக்கு சொந்தம் பாராட்டுபவர்கள் தான்.
ஒரு காலத்தில் தூங்கா நகரில் ‘ராஜா’ நடத்திய தர்பார் அப்படி. அந்தப் பழக்கத்தில் தனது விசுவாசியைத்தான் வாகை எம்எல்ஏ-வுக்கு உதவியாளராக அனுப்பி வைத்தாராம் மிஸ்டர் ‘ராஜா’. தனது விசுவாசியான அந்த உதவியாளருக்கு சீட் கொடுத்தால் அவரை ஜெயிக்க வைக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு என்றெல்லாம் எம்எல்ஏ-விடம் சொல்லி வைத்திருந்தாராம் ‘ராஜா’.
இந்த நிலையில், எம்எல்ஏ-வின் ‘எதிர்பார்ப்பு’ ஆடியோக்கள் வெளியானதும், தன் தலை தப்பிக்க, “ஆட்சியை கவிழ்க்க என்கிட்டயே பேரம் பேசுனாங்களே...” என்று போட்டுவிட்டாராம். இதை சீரியஸாக எடுத்துக் கொண்ட ஆட்சி மேலிடம் விசாரணையை விறுவிறுப்பாக்கியது. இது தொடர்பாக வாகை எம்எல்ஏ தரப்பில் இருந்து ஒரு ஆடியோ பதிவை விசாரணை அதிகாரிகளிடம் கொடுத்தார்களாம்.
அந்த உரையாடலில், “யோவ் உங்க எம்எல்ஏ, கவுன்சிலர் சீட்டுக்கெல்லாம் பேரம் பேசுறதாச் சொல்றாங்க. அப்டின்னா வெயிட்டா ஏதாச்சும் குடுத்தா அரசுக்கு எதிரா ஓட்டுப் போட்டுருவாரோ?” என்று எம்எல்ஏ-வின் உதவியாளரிடம் தமாஷாகக் கேட்டாராம் ‘ராஜா’.
அந்த ஒற்றை வார்த்தைதான் அவரை அல்-கய்தா ரேஞ்சுக்கு அங்குமிங்குமாய் அலைக்கழித்துவிட்டது. தான் பார்க்காத சிறை இல்லை என்றாலும் இந்த விவகாரத்தில் சிறை செல்லாமல் தப்பியதை தன்னை சந்திக்க வரும் நண்பர்களிடம் வியந்து பேசிவரும் ‘ராஜா’, “வெளையாட்டா பேசுனத இப்படி வெனையாக்குவாய்ங்கன்னு நெனைக்கல பங்கு” என்று சொல்லிச் சொல்லிச் சிரிக்கிறாராம்.
தனது அரசியல் குருவான ‘அண்ணன்’ சொல்லித்தான் இலைக் கட்சிக்கு போனாராம் ‘ராஜா’. ஆனால், இப்போதைக்கு அந்தக் கட்சிக்கு எதிர்காலம் இருப்பதாகத் தெரியாததால் அடுத்த ரூட்டைப் பிடித்து வாகைக் கட்சிக்கு தோகை விரித்து, உள்ளாட்சியில் நல்லாட்சியைப் பிடித்துவிடலாம் என தனியாக ஒரு கணக்குப் போட்டாராம் ‘ராஜா’. ஹார்ஸ் பேர விசாரணைகளால் இப்போது அந்தப் பயணத்துக்கும் வழி தெரியாமல் நிற்கிறாராம். ஒரு காலத்தில் தூங்காநகரத்தையே கட்டி ஆண்ட ‘ராஜா’வின் இன்றைய நிலைமையைப் பார்த்தால் சற்று பரிதாபமாகத்தான் இருக்கிறது.