தூங்காநகர் மாவட்ட ஆளும் கட்சி பஞ்சாயத்து | உள்குத்து உளவாளி

தூங்காநகர் மாவட்ட ஆளும் கட்சி பஞ்சாயத்து | உள்குத்து உளவாளி
Updated on: 
1 min read

தூங்காநகர் மாவட்டத்தில் எந்த அரசு நிகழ்ச்சி நடந்தாலும் சர்ச்சையாகி வருகிறது. காரணம், ஆளும் கட்சி எம்எல்ஏ-க்களுக்கு இருக்கும் அதிருப்திதான்.

அண்மையில், கட்டி முடிக்கப்பட்ட புதிய கட்டிடங்களை மாவட்டத்தின் ‘பவர்’ மாண்புமிகுவை வைத்து திறக்க ஏற்பாடு செய்திருக்கிறார் ஆட்சியர். இது தொடர்பாக விசில் எம்எல்ஏ-க்களுக்கு ஒரு நாள் முன்னதாகத்தான் போனில் தகவல் போனதாம். இதைக்கேட்டு ஒரு சில எம்எல்ஏ-க்கள், “திடீர்னு தான் சொல்வீங்களா... முன்கூட்டியே சொல்ல மாட்டீங்களா?” என அதிகாரிகளிடம் குரலை உயர்த்தினார்களாம்.

இருந்தாலும் அவர்கள் நிகழ்ச்சியை புறக்கணிக்காமல் கலந்து கொண்டார்களாம். ஆனால், தூங்காநகர் ஈஸ்ட் தொகுதி எம்எல்ஏ-வானவர் ஆட்சியருக்கே போனைப் போட்டு, “என்கிட்ட கேட்காம என்னோட தொகுதி நிகழ்ச்சியை எப்படி ஏற்பாடு பண்றீங்க? என்னால நிகழ்ச்சிக்கு வரமுடியாது” என்று கொந்தளித்தாராம். இதை அப்படியே ‘பவர்’ மாண்புமிகுவின் காதுக்கு கொண்டு போயிருக்கிறார் ஆட்சியர்.

உட்கட்சி சண்டைக்குள் சிக்கிக்கொள்ள விரும்பாத ‘பவர்’, “என்னைய வெச்சுத்தான் கட்டிடங்களைத் திறக்கணும்கிறது இல்லை. எனக்காக காத்திருக்க வேண்டாம். எம்எல்ஏ-க்களை வெச்சே திறப்பு விழாவை நடத்திக்கோங்க” என்று எஸ்கேப் ஆனாராம்.

இருப்பினும் ஈஸ்ட் தொகுதியில் நடப்பதாக இருந்த புதிய கட்டிடங்கள் திறப்பு விழாவை ஒத்திவைத்திருக்கிறார் ஆட்சியர். இந்தப் பஞ்சாயத்து ஓய்வதற்குள்ளாக, அதே ஈஸ்ட் தொகுதியைச் சேர்ந்த மக்களுக்கு பட்டா வழங்குவதற்காக சிறுத்தை மாண்புமிகுவை வைத்து ஒரு நிகழ்ச்சி ஏற்பாடாகி இருக்கிறது.

இது தொடர்பாகவும் அதிகாரிகள் ஈஸ்ட் எம்எல்ஏ-வுக்கு தயங்கியபடியே தகவல் சொன்னார்களாம். இதைக் கேட்டு மீண்டும் ஹீட்டான எம்எல்ஏ, பழைய பல்லவியையே பாடி கொந்தளித்தாராம்.

இந்தத் தகவலை அப்படியே சிறுத்தை மாண்புமிகுவுக்கு அதிகாரிகள் தெரிவித்தார்களாம். அதற்கு அவர், “அப்படி எல்லாம் என்னோட நிகழ்ச்சியை ஒத்திவைக்க முடியாது சார். திட்டமிட்டபடி நான் நிகழ்ச்சியில் பங்கேற்பேன். அதற்கான ஏற்பாடுகளைச் செய்யுங்கள்” என்று கறாராகச் சொல்லிவிட்டாராம்.

தூங்காநகர் மாவட்ட ஆளும் கட்சி பஞ்சாயத்து | உள்குத்து உளவாளி
விசில் கட்சியின் ‘பெருமாள்’ புள்ளி வில்லங்க செயல் | உள்குத்து உளவாளி

X