

ஒரு காலத்தில் ஒட்டுமொத்த ‘புரம்’ மாவட்ட சூரியக் கட்சியையே கட்டி ஆண்ட ‘முடி’ தலைவர், திட்டமிட்டு வழக்குகள் பின்னப்பட்டதால் தற்போது இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறார். அப்பா தயவில் அந்த மாவட்டத்தின் ‘தென் பாதிக்கு’ செயலாளராக வந்த அவரது புத்திர’சிகாமணி’க்கும் கட்சிக்குள் ஏகப்பட்ட பேர் எசப்பாட்டுப் பாடுகிறார்களாம்.
இந்த இடைவெளியைப் பயன்படுத்திக் கொண்டு, இலைக் கட்சியில் இருந்து இடம் மாறி சூரியக் கட்சியின் ‘மத்தியப் பகுதிக்கு’ செயலாளராகிவிட்ட ‘ராமனின்’ சகோதரர் அழகாய் வியூகம் வகுக்கிறாராம். ஒட்டுமொத்தமாக அந்த மாவட்டத்தில் தனது கையே ஓங்கி இருக்க வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் தனக்கு மாண்புமிகு இருக்கைக்கு சிக்கல் இல்லாமல் இருக்கும் எனக் கணக்குப் போடும் ராமனின் சகோ, தனது எல்லையைத் தாண்டி ஆதரவு வட்டத்தை அகலமாய் விரிக்கிறாராம்.
அந்த மாவட்டத்தின் ‘வட பாதிக்கு’ செயலாளராக இருக்கும் முன்னாள் மாண்புமிகுவானவர் சீனியர் சிட்டிசன் கோட்டாவில் பொறுப்பைத் துறக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். அதனால் தனது இடத்தில் தனது பிள்ளைக்கு முடிசூட்ட கணக்குப் போடுகிறார் அந்த சீனியர். பதிலுக்கு ‘முடியார்’ ‘வட பாதிக்கு’ தனது விசுவாசியான ‘ஹேப்பி’ பிரமுகரை பட்டை தீட்டுகிறாராம். இவர்கள் இருவருக்கும் போட்டியாக ராமனின் சகோவும் தனது விசுவாசியான ‘குட்டுவனை’ கூர் தீட்டுகிறாராம்.
அதேபோல் மாவட்டத்தின் ‘தென் பகுதி’ செயலாளர் பதவிக்கும் முடியாரின் புத்திரசிகாமணியானவருக்கு போட்டியாக, ஊரையும் பேரோடு சேர்த்து வைத்திருக்கும் ‘பெருமான்’ கடவுளின் பேர் கொண்டவரை ஆயத்தபடுத்துகிறாராம் ராமனின் சகோ. இத்தனைக்கும், ‘பெருமான்’ கடவுள் ஒரு காலத்தில் முடியாரின் அதி தீவிர விசுவாசியாக இருந்தவர்.