

இலைக் கட்சியில் இருந்து இன்னும் 15 பேர் எங்கள் பக்கம் தாவத் தயார் என்று ‘இன்கம் துறை’ அமைச்சர் இன்முகத்துடன் சொன்னாலும் சொன்னார், பல மாவட்டங்களில் ‘பறக்கும் பட்சிகள்’ குறித்து பட்டியல் போட ஆரம்பித்துவிட்டார்கள். அந்த வகையில், ‘டர்னிங்’ ஊர் மாவட்டத்தின் ‘பேட்டை’ தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏ-வாக இருக்கும் ‘வீரமான’ முன்னாள் மாண்புமிகுவானவர் குறித்தும் பிரேக்கிங் போடுகிறார்கள். தொடக்கமே வீரமானவர் இலைத் தலை மீது அதிருப்தி கொண்ட அணியின் பக்கம் நின்றார்.
அதனால் மாவட்டப் பொறுப்பையும் பறிகொடுத்தவர், அதன் பிறகு இலைக் கட்சி நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்க மாட்டேன் என்று பகிரங்கமாகவே சொல்லிவிட்டு ஒதுக்கினார். அதேசமயம், இலைக் கட்சிக்குள் இன்னமும் மிச்சம் சொச்சம் இருக்கும் தனது விசுவாசிகளை அழைத்து, “என்னால் முடிஞ்சதை எல்லாம் உங்களுக்கு செஞ்சு குடுத்துட்டேம்பா. இனிமே, உங்களுக்குத் தெரிஞ்ச வழிகளைப் பார்த்து பொழைச்சுக்குங்க” என்று ரூட் மேப் போட்டுக் கொடுத்திருக்கிறார். இதைச் சரியாக புரிந்து கொண்டு சிலபேர் முன்கூட்டியே விசில் பார்ட்டிக்குள் மிங்கிள் ஆகிவிட்டார்கள்.
இந்த நிலையில், இடைத்தேர்தலில் இரண்டு தொகுதிகளில் விசில் சத்தம் பலமானதும் வீரமானவர் தனது வியூகத்தை வேகப்படுத்தி இருக்கிறாராம். மற்றவர்களைப் போல நாமும் ராஜினாமா செய்தால் அடுத்த பேட்ச்சில் ஆளும்கட்சி எம்எல்ஏ ஆகிவிடலாம் என்று கணக்குப் போடுகிறாராம்.
அண்மையில் தனது தொகுதியில் நடந்த சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர், “அம்மாவின் திட்டங்களை எல்லாம் அழகூட்டி, மெருகூட்டி செயல்படுத்தி வருகிறார் முதல்வர் விஜய். இளைஞர்கள் எல்லாம் அவர் பக்கம் நிற்கும்போது நாமும் சேர்ந்து நிற்பது தானே நல்லது” என்று மைண்ட் வாய்ஸை சத்தமாகப் பேசிவிட்டாராம். இதையெல்லாம் வைத்து கூட்டிக் கழித்துப் பேசும் வீரமானவரின் விசுவாசிகள், “அண்ணனும் ரெடியாத்தான் இருக்காரு” என்று சிரிக்கிறார்கள்.
அதேசமயம், வீரமானவரின் வில்லத்தனம் பிடிக்காமல் தேர்தலுக்கு முன்பே விசில் பார்ட்டிக்கு தாவி, அங்கு சீட்டும் வாங்கி எம்எல்ஏ-வாக உட்கார்ந்திருக்கும் ‘பணக்காரக்’ கடவுளின் பெயர் கொண்டவர், வீரமானவர் எடுக்கும் வியூகத்தால் ஜெர்க் ஆகிக் கிடக்கிறாராம். அதனால், “இவர எல்லாம் உள்ள விடாதீங்கப்பா... சகுனி மாதிரி” என விசில் பார்ட்டி தம்பிகளிடம் சமயம் கிடைக்கும் போதெல்லாம் ஓதுகிறாராம்.