

தென் மாவட்டத்தில் உள்ள ‘கோவில்’ தொகுதியில் களமிறங்க சூரியக் கட்சி கூட்டணியில் கடும் போட்டியாம். இந்தத் தொகுதியில் இப்போது சூரியக் கட்சியின் ‘கிங்’ புள்ளி தான் எம்எல்ஏ-வாக இருக்கிறார். மாவட்டத்தில் கழகத்தின் பிரதானப் புள்ளியும் தான் தான் என்பதால் இம்முறையும் ‘கோவில்’ தனக்கே கைகூடும் என நினைத்துக் கொண்டிருந்தார்.
ஆனால், ஆலயக் கட்சிக் குடும்பத்து பெண் வாரிசால் இலைக் கட்சியிலிருந்து ஈர்த்துவரப்பட்ட ’முத்தான’ பெண்மணியானவர் பெண் வாரிசின் சப்போர்ட்டில் ‘கோவில்’ தொகுதியில் கும்பாபிஷேகம் நடத்தத் துடிக்கிறாராம்.
இதற்காக அவர் எடுக்கும் சில பல மூவ்களைப் பார்த்து மிரண்டு போன ‘கிங்’ புள்ளியானவர், தனது பிர்காவுக்குள்ளேயே வரும் ‘நல்லூர்’ தொகுதிக்கு நாகரிகமாக நகர்ந்துவிடும் திட்டத்தில் இருக்கிறாராம். கடந்த முறை ‘நல்லூர்’ தொகுதியில் ‘மலர்ச்சி’ தலைவர் தனது வேட்பாளரை நிறுத்தி ஜெயிக்கவைத்தார்.
இம்முறை அந்த வேட்பாளருக்கு சீட் இல்லை என்பதை நாசூக்காக சொல்லும் விதமாக, “எனது சொந்தத் தொகுதியான ‘கோவில்’ தொகுதியில் இம்முறை நம் கட்சி போட்டியிட வேண்டும் என பிரியப்படுகிறேன்” என்று நைஸாகப் பேசி வருகிறாராம் ‘மலர்ச்சி’த் தலைவர். இதையெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்துவிட்டே சூரியக் கட்சியின் ‘கிங்’ புள்ளி ‘நல்லூர்’ தொகுதிக்கு நடையைக் கட்டுகிறாராம்.