

‘மலர்ச்சி’ கட்சியின் முன்னாள் நிர்வாகிகள் சிலர் அறிவாலயத்துக்கு புறப்படத் தயாராகி வருகிறார்களாம். ஆனால், ‘மலர்ச்சி’ தலைவர் விசில் கட்சி வியூகம் எடுக்கும் இந்த நேரத்தில், தாங்கள் அறிவாலயம் போனால், விசில் பக்கம் சாய்ந்ததற்கு அதையே காரணமாக காட்டிவிடுவார் ‘மலர்ச்சி’ தலைவர் என்பதால் பொதுக்குழு முடியட்டும் என போக்குவரத்தை ஒத்திவைத்திருக்கிறார்களாம்.
இதன் நடுவே, ‘மறுமலர்ச்சி’ கட்சியிலிருந்து மனமில்லாமல் பிரிந்து சென்ற ‘மல்லபுரம்’ தலைவர், கிழக்குக் கடற்கரைச் சாலையில் ‘திராவிட இல்லம்’ என்ற பெயரில் தனது கட்சிக்கான தலைமை அலுவலகத்தை கட்டித் திறக்கும் முயற்சியில் இருக்கிறாராம். “வானவில்லில் கணை தொடுக்க முடியாது... கானல் நீரில் பாசனம் செய்ய முடியாது என்பது ‘மறுமலர்ச்சி ’ தலைவருக்கு நன்றாகத் தெரியும்.
இருந்தாலும் தனது இருப்பைக் காட்டுவதற்காக உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என வரிசையாகப் போராட்டங்களை நடத்த ஆரம்பித்திருக்கிறார். இதற்கு நடுவே, அவர் யோசிக்கும் முன்பே ‘மலர்ச்சி’ நிர்வாகிகள் பலரும் பனையூருக்கு புறப்படத் தயாராகிவிட்டார்கள். அவர்களை இழுத்து நிறுத்தவே, ‘நாங்களே அந்தப் பக்கம் தான் வரப்போறோம்’ என்று அப்பாவும் மகனும் ஆக்ட் கொடுக்கிறார்கள்.
நான் நினைப்பது சரியாக இருந்தால், கூடிய சீக்கிரமே தன்னால் ஏற்பாடு செய்யப்படும் ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்கு விசில் தலைவரை அழைத்து, அங்கே விசில் தலைவருக்கு கூடும் கூட்டத்தை தனது கூட்டமாக காட்டி மைலேஜ் எடுக்கப் பார்ப்பார் ‘மலர்ச்சி’ தலைவர். ஒருகாலத்தில், கூட்டணியில் இருந்த ஜெயலலிதாவுக்கே தெரியாமல் ‘தாமரை’ பிரதமரை மாநாட்டுக்கு அழைத்தவர் தானே” என்று அறிவாலயத் தலைவர்களுக்கு எடுத்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறாராம் ‘மல்லபுரம்’ தலைவர்.