விசில் பார்ட்டிக்கு இலைக் கட்சியின் இருவர் வைக்கும் டிமாண்ட் | உள்குத்து உளவாளி

விசில் பார்ட்டிக்கு இலைக் கட்சியின் இருவர் வைக்கும் டிமாண்ட் | உள்குத்து உளவாளி
Updated on
1 min read

இலைக் கட்சியின் ‘முகம்’ தலைவரும் கோட்டை மாவட்டத்தின் ‘விஜயமானவரும்’ மீண்டும் எம்ஜிஆர் மாளிகைப் பக்கம் போக விருப்பமில்லாமல் இருப்பதாக விசில் பார்ட்டியின் ‘குலுக்கல் மாப்பிள்ளை’ குஷியோடு சொல்லி இருக்கிறார். அதேசமயம், அவர்கள் இருவருக்கும் சேர்த்து விசில் தலைமையிடம் ஒரு கோரிக்கை வைத்திருக்கிறாராம் தாட்பூட் ‘முகம்’ தலைவர். “இனிமேல் எங்களால் சட்டமன்றத்துக்குச் சென்று இலைப் பார்ட்டி எம்எல்ஏ-க்களுடன் முகம் கொடுத்துப் பேசி சகஜமாக இருக்க முடியாது. அதனால், ராஜ்ய சபா இடைத் தேர்தலில் என்னையே மீண்டும் டெல்லிக்கு அனுப்புங்கள்.

அதேபோல் அடுத்து வரும் சுழற்சியில் ’விஜயமானவரையும்’ டெல்லிக்கே அனுப்பி விடுங்கள். இதற்கு சம்மதம் என்றால் நாங்கள் இருவருமே விசில் பார்ட்டிக்கு வந்து விடுகிறோம். எங்கள் தொகுதிகளில் வேறு யாரையாவது நிறுத்திக் கொள்ளுங்கள்” என்று டிமாண்ட் வைத்திருக்கிறாராம்.

இதற்கு அந்தப் பக்கம் இருந்து உரிய உத்தரவாதம் கிடைக்காத காரணத்தால் இருவரின் விசில் பிரவேசமும் தள்ளிப் போகிறதாம். இதனிடையே, விசில் பார்ட்டிக்குப் போகலாமா இலைக் கட்சியிலேயே இருக்கலாமா என ‘விஜயமானவர்’ தனக்கு வாக்களித்த மக்களிடம் கருத்துக் கேட்டு வருகிறார். ஆதரவாளர்கள் பலரும் “விசில் ஓகேண்ணே” என்று சொல்லி வருகிறார்களாம்.

அதேபோல், விசில் பார்ட்டியில் போக்குவரத்து தொழிற்சங்கப் பேரவை இன்னும் தொடங்கப்படாமல் இருக்கும் நிலையில், இலைக் கட்சியில் தொழிற்சங்கப் பேரவையின் மாநிலச் செயலாளரான ‘கமலமானவர்’ 50 பேரைத் திரட்டிக் கொண்டு போய் விசில் பார்ட்டியில் கலந்துவிட்டார். அநேகமாக ‘கமலமானவரின்’ தலைமையில் விசில் பார்ட்டியின் போக்குவரத்து தொழிற்சங்கப் பேரவை கட்டமைக்கப்படலாம் என்கிறார்கள்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in