முட்டை மாவட்ட மிஸ்டர் கோல்டு நிலை | உள்குத்து உளவாளி

முட்டை மாவட்ட மிஸ்டர் கோல்டு நிலை | உள்குத்து உளவாளி
Updated on
1 min read

‘முட்டை’ மாவட்டத்தின் இலைக் கட்சி முன்னாள் ’கோல்டான’ மாண்புமிகுவானவர், தனது ‘பாளையம்’ தொகுதியில் இம்முறை பெருத்த நம்பிக்கையுடன் வேட்பு மனுவை தாக்கினாராம். இருந்த போதும் விசில் கட்சியின் ‘விஜயமான’ பெண்மணி எதிர்பாராத நெருக்கடியைக் கொடுத்தாராம். இதை சமாளிக்க ‘விஜயமானவருக்கு’ 55 ‘எல்’ கொடுத்து (அது என்ன கணக்கோ!) சைலண்ட் ஆக்கினாராம் ‘மிஸ்டர் கோல்டு’.

அதனால் சரியானபடிக்கு பிரச்சாரத்துக்குக்கூட போகாமல் வீட்டுக்குள் முடங்கிய விசில் பார்ட்டியின் ‘விஜயமானவர்’, கடைசி 2 நாட்கள் மட்டும் அங்கும் இங்கும் ஓடியாடி ‘ஃபிலிம்’ காட்டினாராம். அப்படி இருந்தும் அதுவாக அடித்த அலையில் சுமார் ஏழாயிரத்து சொச்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ‘மிஸ்டர் கோல்டை’ சாய்த்துவிட்டார் விசிலின் ‘விஷய’மானவர்.

இந்த நிலையில், இலைக் கட்சி அதிருப்தி கோஷ்டியுடன் கைகோத்த காரணத்தால் ‘மிஸ்டர் கோல்டின்’ மா.செ. பதவியை பறித்தார் எடக்கானவர். மற்ற இடங்களில் எல்லாம், “எங்களை நீக்க அவருக்கு அதிகாரம் இல்லை” என்று எதிர்ப்பாளர்கள் போர்க்குரல் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், ‘மிஸ்டர் கோல்டோ’ எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் கட்சி அலுவலகத்தைப் பூட்டி, தனக்குப் பதிலாக ம.செ. பதவியில் அமர்த்தப்பட்ட தனது ‘பிரியமான எதிரியான’ பாஸ்கரமானவரிடம் சாவியைக் கொடுத்துவிட்டு, “4 ஆயிரம் ரூபாய் கரன்ட் பில் பாக்கி இருக்கு. அதை மட்டும் கட்டிடுங்கப்பா” என்று சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டாராம்.

இதையடுத்து, “அவர் போன வேகத்தைப் பார்த்தால் கூடிய சீக்கிரம் விசில் பார்ட்டியிலேயே சேர்ந்துவிடுவார் போலிருக்கிறது” என்று கமென்ட் அடித்துக் கொண்டிருக்கிறார்கள் அவரது ’பிரியமான எதிரிகள்’.

முட்டை மாவட்ட மிஸ்டர் கோல்டு நிலை | உள்குத்து உளவாளி
விசில் தம்பிகளின் ‘ரீல்ஸ்’ அலப்பறைகள் | உள்குத்து உளவாளி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in