

விசில் கட்சியும் கதர் கட்சியும் தேர்தலுக்கு முன்பு கைகுலுக்க முடியாமல் கட்டையைப் போட்ட கதர் பார்ட்டி தலைவரை சந்திக்க விசில் தலைவர் நேரம் கேட்டிருக்கிறாராம். கதர் தலைவரின் ‘சீமை’ தொகுதிப் பக்கம் இப்படியொரு செய்தியை படரவிட்டு வரும் அவரது விசுவாசிகள், “எங்கள் அன்புத் தலைவரை சந்திக்க நேரம் கேட்டிருக்கிறார் விசில் தலைவர்.
டெல்லியில் இருந்து வந்ததும் சொல்வதாகச் சொல்லி சந்திப்பை ஒத்திப் போட்டிருக்கிறார் எங்கள் தலைவர்” என்று பெருமையடிக்கிறார்கள். கதர் தலைவரின் ‘அன்பான’ எதிரிகளோ, “விசில் தலைவரையே காக்க வைத்திருக்கிறார் என்றால் யோசிக்கத்தான் வேண்டி இருக்கு.
கதர் தலைவரின் பிள்ளையை சிபிஐ வழக்கு நெருக்கிட்டு இருக்கு. இந்த நேரத்துல கதர் தலைவர் விசில் தலைவரை சந்தித்தால் எங்களுக்குத் தான் சிக்கல். ராஜ்ய சபாவுக்குச் செல்வதற்காக சூரியக் கட்சியுடன் இன்னமும் டீலில் இருக்கிறார் எங்காளு. அது நடக்கணும்னா கதர் கட்சியை உடைச்சு சூரியக் கட்சி பக்கம் ஒரு அணியைக் கொண்டு போய்ச் சேர்க்கணும்.
இப்படியான ‘வாஷிங் மெஷின்’ வேலையைச் செய்தால் தான் அப்பாவையும் பிள்ளையையும் தாமரைப் பார்ட்டிகள் நிம்மதியாய் இருக்க விடுவார்கள். விசில் தலைவரை சந்திக்க எங்காளு தயங்குவது உண்மை என்றால் உள்விவகாரம் இதுவாகத்தான் இருக்கும். ‘வேட்பாளர் யாரென்றே தெரியாமல் மக்கள் விசிலுக்கு வாக்களித்திருக்கிறார்கள். இது ஜனநாயகத்துக்கு நல்லது கிடையாது’ என்று மகன் சொல்லி இருப்பதைப் பார்த்தாலும் சந்தேகமாத்தான் இருக்கு” என்கிறார்கள்.