

மலைக்கோட்டை மாநகரின் ‘ஈஸ்ட்’ தொகுதி இந்த ஆட்சியில் முதல் இடைத் தேர்தலை சந்திக்கப் போகிறது. விசில் தலைவர் இந்தத் தொகுதிக்கான எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளதால் 6 மாத காலத்துக்குள் இடைத்தேர்தல் நடத்தியாக வேண்டும்.
சூரியக் கட்சியின் சின்னத்தில் 2021-ல் இங்கே எம்எல்ஏ-வாக தேர்வான நல்லிணக்க ‘ஹார்ட்’ தலைவரை மலைக்கோட்டை மாநகரின் மாண்புமிகுக்கள் சுதந்திரமாக செயல்பட விடவில்லை என்ற புகார் உண்டு. அந்த வருத்தத்தில் இந்தத் தேர்தலில் சீட்டே வேண்டாம் என ஒதுங்கினார் மிஸ்டர் ‘ஹார்ட்’. ஆனால், சூரியக் கட்சி தலைமை தான் அவரை வம்படியாய் இழுத்து வந்து அங்கே மீண்டும் போட்டியிட வைத்தது. எதிர்பாராத விதமாக அங்கே விசில் தலைவரும் கோதாவில் குதித்ததால் சுமார் 27 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப் போனார் மிஸ்டர் ‘ஹார்ட்’.
இந்த நிலையில், தேர்தலில் தோற்றாலும் தனது ‘பூர்’ தொகுதியில் வாக்காளர்களுக்கு சூட்டோடு சூடாக நன்றி சொல்லி முடித்திருக்கிறார் மலைக்கோட்டை மாநகரின் முன்னாள் மாண்புமிகு ‘அன்பு’ புள்ளி. தனது தொகுதியில் மட்டுமல்லாது பக்கத்தில் உள்ள ‘ஈஸ்ட்’ தொகுதியிலும் மிஸ்டர் ‘ஹார்ட்’ உடன் இணைந்து வாக்காளர்களுக்கு நன்றி சொல்லி இருக்கிறார்.
இதுபற்றி விசாரித்தால், வரப்போகும் இடைத் தேர்தலில் ஒருவேளை மிஸ்டர் ‘ஹார்ட்’ ஆளும் கட்சியை எதிர்த்து போட்டியிட தயங்கலாம். அப்படியொரு சூழல் வந்தால், தானே களத்தில் இறங்கவும் தயாராக இருக்க வேண்டும் என்பதற்காகவே திருவாளர் ‘அன்பு’ தனக்கு வாக்களிக்காத வாக்காளர்களுக்கும் நன்றி சொல்லப் போனதாகச் சொல்கிறார்கள்.