

சிட்டிங் தொகுதி எம்எல்ஏ-க்கள் சிலர் மீது மக்கள் மத்தியில் நல்ல அபிப்பிராயம் இல்லை என்று சொல்லி கதர் பார்ட்டிகளை தொடக்கத்திலேயே கதறவிட்டது சூரியக் கட்சி. இந்த நிலையில், வசூலுக்குப் புறப்பட்டிருக்கும் சிலர், “டெல்லியில் பேசி உங்களுக்கே சீட்டை கன்ஃபார்ம் பண்ணிக்கலாம்” என்று சொல்லி கரன்ஸி வேட்டை நடத்தி இருக்கிறார்களாம்.
யாருடைய தைரியத்தில் இதெல்லாம் நடக்கிறது என்பதை ‘ஸ்பைகள்’ மூலம் தெரிந்து கொண்ட மேலிடத்து ‘டங்கர்’ தலைவர், “பணத்துடன் வருபவர்களுக்கும் சீட் இல்லை. பணம் கொடுத்து ஏமாறுபவர் களுக்கும் சீட் கிடையாது. முக்கியத் தலைவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும் சீட் இல்லை.
சாமானிய தொண்டனுக்குத் தான் இம்முறை சீட்” என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறாராம். இவர் சொல்வதை எல்லாம் தலைமையில் இருப்பவர்களின் காதில் ஏறுமா என்பது ‘காங்கிரஸ் ரகசியம்’.
இதனிடையே, இந்தக் களேபரங்கள் எல்லாம் ஆரம்பிக்கும் முன்னதாக, சோஷியல் மீடியா பிரச்சாரத்துக்காக கதர் கட்சியின் டெல்லி தலைமை 3.5 கோடிக்கு டெண்டர் விட்டதாம்.
இந்த டெண்டரில் வலுவாக ‘கட்டிங்’ பார்ப்பதற்காகவே, ஐடி விங் முக்கியப் பொறுப்பில் இருந்தவரை திடீரென மாற்றி அந்த இடத்தில் தனக்கு ‘தலையாட்டும்’ சூரியக் கட்சியின் முன்னாள் பொறுப்பாளரைக் கொண்டு உட்காரவைத்தார்களாம் மாநிலப் பொறுப்பில் இருப்பவர்கள். இந்தத் தகவலையும் ஸ்மெல் செய்து கண்டுபிடித்துவிட்ட எதிர்பார்ட்டிகள், அதையும் தலைமைக்கு புகாராகக் தட்டிவிட்டிருக்கிறார்களாம்.