‘நாஞ்சிலார்’ மிரட்டலுக்குப் பின்னால்... | உள்குத்து உளவாளி

 ‘நாஞ்சிலார்’ மிரட்டலுக்குப் பின்னால்... | உள்குத்து உளவாளி
Updated on
1 min read

தென் கோடியில் இருக்கும் ‘கோவில்’ தொகுதியில் இந்த முறை தனது மகளை நிற்கவைத்து கோட்டைக்கு அனுப்ப வேண்டும் என மனக் கோட்டை கட்டி வைத்திருந்தார் இலைக் கட்சியின் ‘நாஞ்சில்’ புள்ளி. இதற்காக எடக்கானவரிடம் முன்கூட்டியே ‘உரிய’ விதத்தில் பேசி தொகுதியை ரிசர்வ் செய்து வைத்திருந்தாராம். அவரும் “தொகுதி உங்கள் மகளுக்குத்தான்” என உறுதி கொடுத்திருந்தாராம்.

இது விஷயமாக கட்சியின் பிரதானத் தலைவர் ஒருவர் தனது நெருங்கிய உறவுக்கு சீர் செய்வதற்காக கேட்டிருந்த 80 சவரன் நகையை, “நான் செய்து தருகிறேன்” என்று வலியப் போய் செய்து கொடுத்தாராம் ரியல் எஸ்டேட் வருமானத்தில் கோடிகளைக் குவித்து வைத்திருக்கும் ‘நாஞ்சிலார்’.

இத்தனையும் செய்து வைத்திருப்பதால் மகளுக்கு சீட் நிச்சயம் என மலைபோல் நம்பிய ‘நாஞ்சிலார்’, கடந்த ஒரு வருட காலமாக ‘கோவில்’ தொகுதியில் தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், கோயில்கள் என சகல மதத்துக்கும் சகாயங்களை வாரி வழங்கி வந்தார். ஆனால், தற்போது ‘கோவில்’ தொகுதியையே கூட்டணிக் கட்சிக்கு எழுதிவைத்து விட்டது இலைத் தலைமை.

இந்தத் தொகுதியை மட்டுமல்லாது மாவட்டத்தின் ஒரு தொகுதியைத் தவிர மற்ற 5 தொகுதிகளையும் மொத்தமாக கூட்டணிக்கு ‘மொய்’ எழுதிவிட்டது இலைத் தலைமை. இதன் பின்னணியில், இலைக் கட்சியின் ‘சுந்தரமான’ முன்னாள் மாண்புமிகுவின் கைங்கர்யம் இருப்பதாக இப்போது வெளிப்படையாகவே பேச ஆரம்பித்திருக்கும் ‘நாஞ்சிலார்’, “‘சுந்தரமானவர்’ போட்டியிடும் தொகுதியிலும் ‘கோவில்’ தொகுதியிலும் சுயேச்சையாக போட்டியிட்டு நான் யார் என்பதைக் காட்டுவேன். எடக்கானவர் இங்கு பிரச்சாரத்துக்கு வரும்போது இதுகுறித்து அவரிடம் நியாயம் கேட்பேன்” என்று மிரட்டிக் கொண்டிருக்கிறாராம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in