‘தங்கமான’ தலைவரின் எதிர்காலம் இனி? | உள்குத்து உளவாளி

‘தங்கமான’ தலைவரின் எதிர்காலம் இனி? | உள்குத்து உளவாளி
Updated on
1 min read

தலைவர் ‘கோட்டையன்’ எடக்கானவருக்கு எதிராக புரட்சிக் கொடியை தூக்கிய சமயத்திலேயே ‘தங்கமான’ இன்னொரு தலைவரும் தடாலடி முடுவெடுக்க தயாராவதாக பேச்சுக் கிளம்பியது. இது விஷயமாக அப்போது, ஆலயக் கட்சி ‘முகவர்கள்’ அவரிடம் பேச்சுவார்த்தை நடத்திவிட்டதாகவும் ஃபிளாஷ் நியூஸ் ஓட்டினார்கள்.

ஆனால் இதையெல்லாம் மறுத்த இன்னொரு தரப்பினர், “ஏங்க... ‘தங்கமான’வரும் எடக்கானவரும் உறவுக்காரங்க. அவரு அப்படி எல்லாம் முடிவெடுக்க மாட்டாரு. அதுவுமில்லாம இப்ப அவரு பேசக்கூட முடியாத நிலையில ஆஸ்பத்திரியில படுத்துருக்காரு. அத வெச்சு எல்லாரும் இப்புடி கம்பு சுத்தி விடுறீங்களே...” என்று சப்பைக் கட்டுக்கட்டினார்கள்.

அதேசமயம், தன்னைப் பற்றி இப்படியெல்லாம் வதந்திகள் வட்டமடிப்பது தெரிந்ததும், டிஸ்சார்ஜ் ஆன கையோடு மலைக்கோட்டை மாநகரில் எடக்கானவர் கலந்துகொண்ட பிரச்சாரக் கூட்டத்தில் ‘தங்கத்’ தலைவர் ப்ரசன்ட் ஆனார்.

இந்த நிலையில், இலைக் கட்சியின் பொதுக்குழு தீர்மானங்களை தயாரிக்கும் குழுவில் இருந்து ‘தங்கத்’ தலைவரை நீக்கி இருப்பதாக இப்போது செய்திகள் சுற்ற ஆரம்பித்திருக்கிறது. கட்சியை ஒருங்கிணைக்க வேண்டும் என்று தலைவர் ‘கோட்டையன்’ குரல் எழுப்பியதன் பின்னணியில் ’தங்கத்’ தலைவரும் இருந்ததாகச் சொன்னார்கள்.

இப்போது, பனையூர் பார்ட்டிக்கு இன்னும் சில முன்னாள் அமைச்சர்களும் வந்து சேருவார்கள் என்று தலைவர் ‘கோட்டையன்’ தடதடத்துக் கொண்டிருக்கும் நிலையில், ‘தங்கத்’ தலைவரை என்ன நினைத்து தீர்மானக் குழுவில் நீக்கி இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

‘தங்கமான’ தலைவரின் எதிர்காலம் இனி? | உள்குத்து உளவாளி
“துண்டை மாற்றியதால் கொள்கையும் மாறிப்போச்சு” - செங்கோட்டையன் மீது பழனிசாமி பாய்ச்சல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in