

புதுக்கோட்டையில் பேருந்து நிலையத்தை தமிழக முதல்வர் திறந்து வைப்பதற்கு முன்னரே நேற்று திமுகவினர் இனிப்பு வழங்கியதை தடுத்த போலீஸார்.
புதுக்கோட்டை: புதுக்கோட்டை பேருந்து நிலையத்தை இடித்துவிட்டு, அதே இடத்தில் ரூ.18.9 கோடியில் நவீன புதிய பேருந்து நிலையம் கட்டும் பணியை 2024 அக்.9-ம் தேதி முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில், முதல்வர் விஜய் இன்று (நவ.2) திறந்துவைக்க உள்ளார்.
திமுக ஆட்சியில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையம் தற்போது மக்கள் பயன்பாட்டுக்கு வரஉள்ளதையொட்டி, பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு திமுகவினர் நேற்று இனிப்பு கொடுக்க ஆயத்தமாகினர்.
இதையறிந்த போலீஸார், பேருந்து நிலையத்தில் இனிப்பு கொடுக்க அனுமதி இல்லை, மீறினால் கைது செய்யப்படுவீர்கள் என்று எச்சரித்தனர். இதனால், பேருந்து நிலையத்துக்கு செல்லாமல், வடக்கு ராஜவீதியில் உள்ள திமுக மாவட்ட அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர் கே.கே.செல்லபாண்டியன், எம்எல்ஏ முத்துராஜா உள்ளிட்டோர் பொதுமக்களுக்கு லட்டு கொடுக்க முயன்றனர். அங்கும் லட்டு கொடுக்கக் கூடாது என டிஎஸ்பி பிருந்தா தலைமையிலான போலீஸார் தடுத்தனர். ஆனால், அதை மீறி திமுகவினர் பொதுமக்களுக்கு லட்டு கொடுக்க முயன்றபோது, தட்டுடன் லட்டுகளை போலீஸார் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர்.
இதைக் கண்டித்து போலீஸாருடன் திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட லட்டுகள் திமுகவினரிடம் திருப்பி வழங்கப்பட்டன.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய கே.கே.செல்லபாண்டியன், “திமுக ஆட்சியில் பேருந்து நிலையம் மற்றும் உள்விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டதை வரவேற்று, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்குவதற்கு அனுமதி வாங்க வேண்டும் என்று காவல் துறை கூறுவது தவறு. இனிப்பு வழங்குவதை தடுத்த காவல் துறையை கண்டிக்கிறோம். நாளை (இன்று) நடைபெறும் திறப்பு விழாவில் பேருந்து நிலையத்துக்குச் சென்று பொதுமக்களுக்கு இனிப்பு வழங்க உள்ளோம்” என்றார்.