

விழுப்புரம்: “வெனிசுலா அதிபரை சட்டவிரோதமாக கைது செய்த அமெரிக்க அதிபரை கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுத்த காவல் துறையினர், போராட்டத்துக்கு வந்தவர்களை கைது செய்து மிக கடுமையான அடக்குமுறையை ஏவினர். காலால் உதைப்பது, குத்துவது போன்ற காவல் துறையின் செயலை வன்மையாக கண்டிக்கிறோம்” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நிதியளிப்பு மற்றும் சிறப்பு பேரவைக் கூட்டம் விழுப்புரத்தில் இன்று (ஜன.10) நடைபெற்றது. மாநிலச் செயலாளர் பி.சண்முகம் சிறப்புரையாற்றினார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “வெனிசுலா அதிபர் மற்றும் அவரது மனைவியை சட்டவிரோதமாக கைது செய்த அமெரிக்க அதிபரை கண்டித்து, சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்பு கடந்த 5-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு காவல் துறையிடம் அனுமதி கோரப்பட்டது.
ஆனால், அனுமதி மறுத்த காவல் துறையினர், போராட்டத்துக்கு வந்தவர்களை கைது செய்து, 3 மணி நேரம் அலைகழிக்கச் செய்தனர். கைது நடவடிக்கை என்ற பெயரில் மிக கடுமையான அடக்குமுறையை காவல் துறையினர் ஏவி உள்ளனர். காலால் உதைப்பது, குத்துவது போன்ற செயலை வன்மையாக கண்டிக்கிறோம். அமெரிக்க தூதரகம் முன்பு போராட்டம் நடத்தக் கூடாது என்ற முடிவை சென்னை மாநகர காவல் துறை தாமாகவே எடுத்துள்ளது.
இந்தியா, ரஷ்யா உட்பட பல்வேறு நாடுகளுக்கு 500 சதவீதம் வரியை உயர்த்த போவதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார். 50 சதவீதம் கூடுதல் வரி விதித்த காரணத்தால் திருப்பூர் உள்ளிட்ட நகரங்களில் ரூ.10 ஆயிரம் கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஜவுளி, தோல் மற்றும் கடல் உணவுகள் சார்ந்த தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவை அடிபணிய வைக்கவே 500 சதவீத வரி விதிக்கப்படும் என்பது தொழிலை அழிப்பது மட்டுமல்ல, தொழிலாளர்களின் வேலைவாய்ப்பை பறிப்பதாகும். இந்திய பொருளாதாரத்தின் மீது கொடூரமான தாக்குதலை அமெரிக்கா தொடுத்துள்ளது.
இதனை கண்டித்து, அமெரிக்கவை எதிர்த்து தொடர் போராட்டம் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. வெள்ளை மாளிகை முன்பு போராட்டம் நடத்த, அந்நாட்டு அரசு அனுமதிக்கும் நிலையில், அமெரிக்க தூதரகம் முன்பு போராட்டம் நடத்தக் கூடாது என சென்னை காவல் துறை கூறுவதை ஏற்க முடியாது.
தூதரகம் முன்பு போராட்டம் நடத்துவதற்கான இடத்தை முதல்வர் ஒதுக்கிக் கொடுக்க வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸட் கட்சியைச் சேரந்த 135 பேர் மீது கடுமையான பிரிவுகளில் பொய் வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸாரை கண்டிக்கிறோம்.
இந்தியாவை அடிமைப்படுத்த வேண்டும் என்ற கெட்ட நோக்கத்துடன் செயல்படுவதுடன் 500 சதவீத வரி விதிக்கும் அமெரிக்க அரசை கண்டித்து கோவை, திருப்பூர், ஈரோடு, ஓசூர், கரூர், சென்னை உட்பட 10 இடங்களில் வரும் 22-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
தாமதம் ஏற்படுவதால், கைரேகை பதிவு என்ற நடைமுறையில் மாற்றம் செய்து, பெயரை பதிவு செய்து கையெழுத்து பெற்றுக் கொண்டு, பொங்கல் பரிசுத் தொகுப்பை முதல்வர் வழங்க வேண்டும். தங்களுக்கு எதிரானவர்களை, தங்களது வழிக்கு கொண்டு சாம, பேத, தான, தண்ட என்ற அனைத்து வழிமுறையை பாஜக கடைபிடிக்கிறது.
வருமான வரித் துறை, அமலாக்கத் துறை, சிபிஐ ஆகியவற்றைத் தொடர்ந்து தணிக்கைத் துறையை ஆயுதமாக பயன்படுத்துகிறது. உலக மக்கள் பேசி வரும் நிலையில், தான் நடித்த ஜனநாயகன் படக்குழுவுக்கு ஆதரவாக, தவெக தலைவர் விஜய் வாய் திறக்காமல் இருக்கிறார். பாஜகவை பகைத்து கொள்ளக்கூடாது என்பதற்காக விஜய் மவுனமாக இருக்கிறார் என்ற கேள்வி எழுகிறது.
மக்களுக்கு பாதிப்பு என்றால், எப்படி குரல் கொடுப்பார்? பொங்கலுக்கு பிறகு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என்ற உயர் நீதிமன்றம் தெரிவித்திருப்பது உள்நோக்கம் இருக்கிறது.
சினிமா துறையை தணிக்கைக் குழு அழிக்கப் பார்க்கிறது. விஜய்-க்கு மிகப் பெரிய சக்தி இருப்பதாக நாங்கள் நினைக்கவில்லை.
அமித் ஷாவுக்கு எதிராக ஊழல் ஆதாரம் இருந்தால், மிரட்டல் விடுக்காமல் மேற்கு வங்க முதல்வர் மம்தா வெளியிடலாம். திமுக தலைமையிலான அணியில் தொடர்கிறோம். கூட்டணிக்கு சில கட்சிகள் வர இருப்பதால், பேச்சுவார்த்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
பாஜக, அதிமுகவை தோற்கடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். இரட்டை இலக்கில் போட்டியிடுவோம். சம வேலைக்கு சம ஊதியம் என்ற இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை நியாமானது. அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தமிழக அரசு தீர்வு காண வேண்டும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான அமைச்சரவையில் பங்கேற்போம். பிற கட்சி தலைமையிலான அமைச்சரவையில் பங்கேற்க மாட்டோம். இதற்கு எடுத்துக்காட்டு கேரள மாநிலம். இது கொள்கை ரீதியான முடிவு. கடந்த தேர்தல்களில் ஏற்படாத கருத்து, 2026-ல் நடைபெற உள்ள தேர்தலில் ஆட்சியில் பங்கு என்ற முழக்கம் அதிகம் உள்ளது. தேர்தலுக்கு பிறகுதான், ஆட்சியில் பங்கு என்ற சூழல் முடிவு செய்யப்படும்.
மாதாந்திர மின் கட்டணம் உட்பட திமுகவின் பல முக்கிய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என முதல்வரை வரும் 13-ம் தேதி சந்தித்து முறையிட உள்ளோம்” என்று அவர் கூறினார். கூட்டத்தில் தேர்தல் நிதியாக மாநிலத் தலைவர் சண்முகத்திடம் மாவட்ட செயலாளர் சுப்ரமணியன் ரூ.12 லட்சம் வழங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் ரவீந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.