

கோப்புப் படம்
சென்னை: அண்டை மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு போதைப் பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, தமிழக எல்லையில் போலீஸார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் அடுத்த மாதம் 23-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் வாக்குப் பதிவு ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் முழு வீச்சில் செய்து வருகிறது.
மேலும் காவல் துறை உட்பட அனைத்து அரசு துறைகளும் தேர்தல் ஆணையத்தின் மேற்பார்வையில் இயங்கி வருகின்றன. போலீஸாரும் தேர்தல் தொடர்பான பணிகளில் அதிகளவில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
இதைப் பயன்படுத்தி அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு சட்ட விரோதமாக போதைப் பொருட்கள் மற்றும் கள்ளச் சாராயத்தை சிலர் கடத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையறிந்த போலீஸ் அதிகாரிகள் மாநில எல்லையில் கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவிட்டனர். அதன்படி, கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
மேலும் அண்டை மாநிலங்களிலிருந்து தமிழகம் வரும் ரயில், பேருந்து களையும் போலீஸார் உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர். கடத்தல் தொடர்பாக தகவல் கிடைத்தால் அதுகுறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க பொதுமக்களை காவல் துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.