

சென்னை: சென்னையில் மூத்த குடிமக்களை குறிவைத்து நடைபெறும் இணையவழி மோசடிகளைத் தடுக்கும் வகையில், சென்னை பெருநகர காவல்துறையின் சைபர் குற்றப்பிரிவு சார்பில் 3 இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
சைபர் மோசடிகளைத் தடுக்கும் வகையில் விழிப்புணர்வை அதிகரிக்கும்படி, அனைத்து காவல் நிலைய போலீஸாருக்கும் சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
அந்த வகையில், திருவான்மியூர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சாய் சுபோதயா அடுக்குமாடி குடியிருப்பில் சைபர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் உஷாராணி தலைமையிலும், அண்ணாநகர் மேற்கு பகுதியில் உள்ள ஐசிஐசிஐ வங்கி வளாகத்தில் காவல் ஆய்வாளர் வேல்ராஜ் தலைமையிலும், ஈ.வெ.ரா. சாலையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி வளாகத்தில் காவல் ஆய்வாளர் தங்கமணி தலைமையிலும் நேற்று முன்தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்ற குடியிருப்புவாசிகள், மூத்த குடிமக்கள் மற்றும் வங்கி வாடிக்கையாளர்களுக்கு தற்போது அதிகரித்து வரும் இணையவழி மோசடிகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
இணையவழி பண மோசடியில் பாதிக்கப்பட்டால் காலதாமதம் செய்யாமல் உடனடியாக www.cybercrime.gov.in என்ற தேசிய சைபர் குற்றப் புகார் இணையதளத்திலும் புகார் அளிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டது.