சாத்தான்குளம் வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 9 பேரும் ஜூன் 1-க்குள் மேல்முறையீடு செய்யலாம்: ஐகோர்ட்

சாத்தான்குளம் வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 9 பேரும் ஜூன் 1-க்குள் மேல்முறையீடு செய்யலாம்: ஐகோர்ட்
Updated on
1 min read

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் விசாரணை நீதிமன்றத்தில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட போலீஸார் 9 பேரும் ஜூன் 1-க்குள் மேல்முறையீடு செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சாத்தான்குளம் ஜெயராஜ், அவர் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த 2020ல் கரோனா ஊரடங்கு அமலில் இருந்த போது சாத்தான்குளம் போலீஸாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர்.

இது தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்து அப்போதைய காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், மேலும், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், தலைமை காவலர் முருகன், காவலர்கள் சாமதுரை, முத்துராஜா, செல்லதுரை, தாமஸ் பிரான்சிஸ், வெயிலுமுத்து ஆகியோரை சிபிஐ கைது செய்தது.

இந்த வழக்கை மதுரை மாவட்ட நீதிமன்றம் விசாரித்து ஸ்ரீதர் உட்பட 9 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்தது. தூக்கு தண்டனையை உறுதிப்படுத்தக்கோரி தமிழக அரசு மற்றும் சிபிஐ தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்கள் நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ், ராமகிருஷ்ணன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. ஸ்ரீதர் உட்பட 9 பேரும் சிறையில் இருந்தபடி காணொலி வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது நீதிபதிகள், 9 பேரிடமும் வழக்கறிஞர்கள் நியமனம் செய்துள்ளீர்களா? எனக் கேட்டார். அதற்கு, அடுத்த விசாரணைக்குள் வழக்கறிஞர் நியமித்துவிடுவோம் என பதிலளித்தனர்.

இதையடுத்து சிபிஐ மேல்முறையீடு மனுவின் நகலை குற்றவாளிகளுக்கு வழங்க பதிவாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். முதல் குற்றவாளியான ஸ்ரீதர், மேல்முறையீட்டு மனுவை தயார் செய்ய 15 நாள் விடுப்பு வழங்குமாறு கோரிக்கை வைத்தார். அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், மேல்முறையீடு மனு தயாரிக்க சிறைத்துறை போதிய வசதிகளை செய்து தரும்.

சிறையில் அனைத்து வசதிகளும் உள்ளது. எனவே விடுமுறை தேவையில்லை என்றனர்.

தொடர்ந்து நீதிபதிகள், இந்த வழக்கு தமிழகம் முழுவதும் உற்றுநோக்கப்படும் வழக்காகும். எனவே, ஜூன் 1-க்குள் மேல்முறையீடு மனுக்களை தாக்கல் செய்யுங்கள். ஜூன் 4 முதல் தினமும் விசாரணை நடத்தப்பட்டு தீர்ப்பளிக்கப்படும். விசாரணை ஜூன் 4-க்கு ஒத்திவைக்கப்படுகிறது என உத்தரவிட்டனர்.

சாத்தான்குளம் வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 9 பேரும் ஜூன் 1-க்குள் மேல்முறையீடு செய்யலாம்: ஐகோர்ட்
புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு: கருணாஸ் குற்றவாளி என தீர்ப்பு; மே 5-ல் தண்டனை விவரம் அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in