

சென்னை: தமிழக காவல்துறையில் பல்வேறு காரணங்களுக்காக நீண்டகாலமாக பணியிடை நீக்கத்தில் இருக்கும் காவலர்களை நிபந்தனைகளுடன் மீண்டும் பணியில் அமர்த்த டிஜிபி வெங்கடராமன் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள உத்தரவு: தமிழக காவல்துறையில் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குகள், குற்றவியல் வழக்குகள் மற்றும் துறை சார்ந்த ஒழுங்குநடவடிக்கைகள் காரணமாக, 2025 டிச.31 நிலவரப்படி மொத்தம் 439 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் 202 காவலர்கள் ஓராண்டுக்கும் மேலாக பணியில் இல்லாமல்உள்ளனர்.
வேலை வாங்காமல் ஊதியம் வழங்குவது அரசுக்கு இழப்பு என அரசு தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், நீண்டகால நிலுவையில் உள்ள வழக்குகள் தொழில்நுட்பக் காரணங்களுக்காக நீதிமன்றங்களால் ரத்து செய்யப்படுவதையும் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடுமையான குற்றச்சாட்டு அல்லது தீவிரமான ஒழுக்கக்கேடு இல்லாத பட்சத்தில், அந்தக் காவலர்களை மீண்டும் பணியில் சேர்க்க உயர் அதிகாரிகள் பரிசீலனை செய்யலாம்.
நீதிமன்றங்களில் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள லஞ்ச ஒழிப்பு மற்றும் குற்றவியல் வழக்குகளில், தாமதத்துக்குத் தெளிவான காரணங்கள் இல்லையெனில், துறைரீதியான ஆலோசனைகளை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவியல் வழக்குகள் நிலுவையில் இருந்தாலும், அதற்கு இணையாக துறைரீதியான விசாரணையை தொடங்க வேண்டும்.
மீண்டும் பணியில் சேர்க்கப்படும் காவலர்களுக்கு சில முக்கிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. அதாவது, ஒழுங்கு நடவடிக்கை முடியும் வரை, இவர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தபொறுப்புகளோ அல்லது அதிகாரமிக்க பணியிடங்களோ வழங்கப்படக் கூடாது.
இவர்கள் மீதான விசாரணைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் பணி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் அனைத்து பிரிவு காவல்துறை உயர் அதிகாரிகளும் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ளபணியிடை நீக்க வழக்குகளை ஆய்வு செய்து, தகுதியானவர்களை உடனடியாக மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும். இது குறித்த அறிக்கையை பிப்.13-க்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.