

சென்னை: வளசரவாக்கம் காவல் நிலைய ஆய்வாளர்கள் இருவர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். சென்னை வளசரவாக்கத்தில் அரசு மினி பேருந்தில் பயணித்த 7-ம் வகுப்பு மாணவியிடம் கடந்த 19-ம் தேதி நடந்துநர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து வளசரவாக்கம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், குற்றவாளியை கைது செய்யவில்லை எனக் கூறி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கங்களை சேர்ந்தவர்கள் நேற்று முன்தினம் இரவு காவல் நிலையம் முன்பு திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதன் எதிரொலியாக, உரிய நடவடிக்கை எடுக்காத வளசரவாக்கம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இதேபோல், சட்ட விரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட 17 பேரை தனிப்படை போலீஸார் கைது செய்து வளசரவாக்கம் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
இந்நிலையில், 3 பேர் மீது மட்டும் வழக்குப் பதிவு செய்த வளசரவாக்கம் சட்டம் - ஒழுங்கு ஆய்வாளர் அன்புக்கரசனையும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி போலீஸ் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.