சவுக்கு சங்கரின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்: உயர் நீதிமன்றத்தில் காவல் துறை அறிக்கை தாக்கல்

‘மருத்துவ அறிக்கையின்படி அவசர சிகிச்சை தேவையில்லை’
சவுக்கு சங்கர்

சவுக்கு சங்கர்

Updated on
1 min read

சென்னை: மருத்துவ அறிக்கையின்படி அவசர சிகிச்சை தேவையில்லாததால் யூடியூபர் சவுக்கு சங்கரின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என காவல் துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சிலரை மிரட்டி பணம் பறித்ததாக அளிக்கப்பட்ட புகாரில் கைது செய்யப்பட்ட சவுக்கு மீடியா சிஇஓ- வான யூடியூபர் சவுக்கு சங்கருக்கு மருத்துவ காரணங்களுக்காக சென்னை உயர் நீதிமன்றம் 3 மாதங்களுக்கு இடைக்கால நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

இந்நிலையில், மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் பெற்று, தொடர்ந்து அவதூறான வீடியோக்களை சமூக வளைதளங்களில் பதிவிட்டு வருகிறார் என்றும், ஜாமீன் நிபந்தனைகளை அவர் மீறி செயல்படுவதால், ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என காவல் துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், வழக்கில் தொடர்புடைய சாட்சிகளுக்கு மிரட்டல் விடுக்கவோ, பத்திரிக்கை மற்றும் சமூக வளைதளங்களில் பேசி வீடியோ வெளியிடவோ கூடாது என கூடுதல் நிபந்தனைகளை விதித்ததுடன், இவற்றை மீறினால் ஜாமீன் ரத்து செய்யப்படும் என உத்தரவிட்டது.

மேலும், சவுக்கு சங்கரை பிப்.2-ம் தேதி முழு உடல் பரிசோதனை செய்து மருத்துவ அறிக்கையை பிப்.3-ம் தேதி நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, மருத்துவ அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, சவுக்கு சங்கர் தரப்பில் தன்னையும் வழக்கில் சேர்க்கக் கோரி இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, சங்கரின் மனுவுக்கு காவல் துறை தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் பி.வேல்முருகன், எம்.ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல் துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘சவுக்கு சங்கருக்கு அவசர மருத்துவ சிகிச்சை எதுவும் தற்போதைக்கு தேவை இல்லை. 2-வது வகை சர்க்கரை நோய் பாதிப்பு மட்டுமே உள்ளது. 2024-ஆம் ஆண்டு இதயத்தில் வால்வுகள் பொருத்தப்பட்டதால் உடல்நிலை சீராக உள்ளது. அதனால், இதய சிகிச்சை தற்போது தேவையில்லை.

நல்ல உடல்நிலையில் இருந்தும் சிகிச்சை என்ற பெயரில் வழக்கில் இருந்து தப்பிக்க முயற்சிக்கிறார். நீதிமன்ற உத்தரவின்படி விசாரணைக்கு இதுவரை எந்த ஒத்துழைப்பும் வழங்கவில்லை. வழக்கு தொடர்பான ஆவணங்களை மறைத்து வருகிறார். அதனால், விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்தது மற்றும் மருத்துவ் அறிக்கை அடிப்படையில் சவுக்கு சங்கரின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.

அதையடுத்து, நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை வரும் பிப்.18-க்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளனர்.

<div class="paragraphs"><p>சவுக்கு சங்கர்</p></div>
திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவில் பக்ரீத், ரம்ஜான் நாட்களில் மட்டும் தொழுகைக்கு அனுமதி: உச்ச நீதிமன்றம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in