

சவுக்கு சங்கர் | கோப்புப் படம்
சென்னை: சவுக்கு சங்கருக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமீனை ரத்து செய்யக் கோரி போலீஸார் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவுக்கு, சங்கரின் தாயார் பதில் அளிக்குமாறும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரபல யூடியூபரும், சவுக்கு மீடியா முதன்மை செயல் அதிகாரியுமான சவுக்கு சங்கர் மீது ஆதம்பாக்கம் மற்றும் சைதாப்பேட்டை போலீஸார் பதிவு செய்த மோசடி வழக்குகளில், கடந்த டிச. 13-ம் தேதி போலீஸார் சங்கரைக் கைது செய்தனர். தனது மகனுக்கு மருத்துவக் காரணங்களுக்காக ஜாமீன் வழங்க வேண்டுமென சவுக்கு சங்கரின் தாயார் கமலா தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், சவுக்கு சங்கருக்கு வரும் மார்ச் 25 வரை இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.
இந்நிலையில், சவுக்கு சங்கருக்கு வழங்கப்பட்டுள்ள இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக் கோரி சைதாப்பேட்டை காவல் ஆய்வாளர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், சவுக்கு சங்கர் ஜாமீன் நிபந்தனைகளை மீறி செயல்பட்டு வருவதால், அவருக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
மேலும், சவுக்கு சங்கருக்கு மருத்துவ ரீதியாக ஏதாவது பிரச்னைகள் ஏற்பட்டால் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சையளிக்கப்படும் என்றும், அவரது உடல்நிலையை கண்காணிக்க மருத்துவக் குழுவை அமைக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் பி.வேல்முருகன், எம்.ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ், “ஜாமீனில் வெளியே வந்த பிறகும் சாட்சிகளை மிரட்டும் வகையில் சவுக்கு சங்கர் தொடர்ந்து யூடியூபில் பேசி வருகிறார்” என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “மருத்துவக் காரணங்களுக்காக ஜாமீன் பெற்றுவிட்டு, இதுபோல செய்யலாமா?” என சவுக்கு சங்கர் தரப்புக்கு கேள்வி எழுப்பினர். அப்போது கமலா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ்.ரவி மற்றும் வழக்கறிஞர் எம்.ராமமூர்த்தி ஆகியோர், “போலீஸார் எங்களுக்கு அளித்துள்ள மனு முழுமையாக இல்லை. இது தொடர்பாக பதில் அளிக்க அவகாசம் அளிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டனர்.
அதையடுத்து நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் 19-ம் தேதிக்கு தள்ளிவைத்து, அதற்குள் இந்த வழக்கில் கமலா தரப்பில் பதில் அளிக்க வேண்டுமென உத்தரவிட்டனர்.