

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ளும் வான்வழி திட்டம் தொடங்கப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆளில்லா விமானங்கள் மூலம் பாதுகாப்புப் பணிகளை மேற் கொள்ளும் 'வான்விழி திட்டத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் தலைமையில், ஆட்சியர் வீரப்பன் தொடங்கி வைத்து, அதன் செயல்பாடுகளை பார்வையிட்டார். மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை இணைந்து, தொழில்நுட்ப நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இத்திட்டத்தை செயல்படுத்துகின்றன.
செயற்கை நுண்ணறிவு மற்றும் தன்னியக்க தொழில் நுட்பத்தில் செயல்படும் ஆளில்லா விமானங்கள் மூலம் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு, சமூக விரோத செயல்களைக் கண்டறிதல், சட்டவிரோத மதுபான உற்பத்தி கண்காணிப்பு, போக்குவரத்து நெரிசல், கூட்ட மேலாண்மை, சுற்றுலாத் தலங்கள் கண்காணிப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.
காவல்துறையின் அவசர உதவி எண் 112 கட்டுப்பாட்டு அறையுடன் இத்திட்டம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சம்பவங்களை நிகழ் நேரத்தில் கண்டறிந்து, துல்லியமான இருப்பிடத்தை அறிந்து, எச்சரிக்கை மற்றும் விரைவு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க முடியும்.
மேலும், பகல், இரவு என அனைத்து நேரங்களிலும் பரந்த பகுதிகளை கண்காணிப்பதுடன், பேரிடர் மற்றும் அவசர கால நடவடிக்கைகளிலும் ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்படும். செயற்கை நுண்ணறிவு, தன்னியக்கம், உள்நாட்டு தொழில்நுட்பம் மற்றும் நிகழ் நேர வான்வழி கண்காணிப்பு ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் இத்திட்டம், செங்கல்பட்டு மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை காவல் நடவடிக்கைகளையும் பொதுமக்களின் பாதுகாப்பையும் மேலும் வலுப்படுத்தும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.