

கோப்புப் படம்
சென்னை: குற்றச் செயல்களை முன்கூட்டியே தடுக்கும் வகையில் தி.நகர் பகுதியில் போலீஸார் கூட்டுச் சோதனை மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
சென்னையில் குற்றச் செயல்களை முற்றிலும் தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் மாலை தி.நகர் காவல் துணை ஆணையர் மேற்பார்வையில், 4 உதவி ஆணையர்கள் தலைமையில் சிறப்பு கூட்டுச் சோதனை நடைபெற்றது.
இதில் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் ஆயுதப்படை போலீஸார் என ஏராளமானோர் 5 குழுக்களாகப் பிரிந்து, கே.கே.நகர், எம்.ஜி.ஆர்.நகர் காவல் நிலைய எல்லைகளில் தீவிர ரோந்து மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த அதிரடி நடவடிக்கையின்போது, 56 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
மேலும், எம்.ஜி.ஆர்.நகர் காவல் நிலையத்தில் பதிவான கஞ்சா வழக்கில் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்த ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்த கணேஷ் (25) என்பவரும், அசோக் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அடிதடி வழக்கில் தலைமறைவாக இருந்த சிலம்பரசன் (23), தேவா (26) ஆகிய இருவரும் என மொத்தம் 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
வாகனச் சோதனை
இதற்கிடையே, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை கண்டறிய 20 கடைகளில் போலீஸார் சோதனை நடத்தினர். மேலும், தீவிர வாகனத் தணிக்கையில் 146 வாகனங்கள் சோதனையிடப்பட்டன.
மேலும், முக்கிய சாலை சந்திப்புகள், பொதுமக்கள் அதிகம் கூடும் சந்தைகள், பேருந்து நிலையங்கள் மற்றும் சிறிய தெருக்களில் போலீஸார் நடைரோந்து மேற்கொண்டனர். அப்போது பொதுமக்களிடம் கலந்துரையாடி, அவர்களது குறைகளையும் கேட்டறிந்தனர்.
சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள், தொடர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள், நீதிமன்றப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள், தலைமறைவு குற்றவாளிகள் மற்றும் சந்தேக நபர்களின் நடமாட்டத்தைக் கண்காணிப்பதும், சட்டவிரோத செயல்களைக் கண்டறிவதும், போதைப்பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களின் விற்பனையைத் தடுப்பதுமே இந்த கூட்டுச் சோதனையின் முக்கிய நோக்கம் என காவல் ஆணையர் அமல்ராஜ் தெரிவித்தார்.