சென்னையில் 2024-ஐ விட 2025-ல் குற்றச் செயல்கள், கொலைகள் குறைவு: காவல் ஆணையர் அருண் தகவல்

Police Commissioner Arun

காவல் ஆணையர் அருண்

Updated on
2 min read

சென்னை: சென்னையில் முந்தைய ஆண்டுகளை ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு குற்றச்செயல்கள், கொலைகள் குறைந்ததுள்ளது எனவும், 1,092 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக காவல் ஆணையர் அருண் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னையில் 2023, 2024 ஆகிய ஆண்டுகளில் தலா 105 கொலைகள் நடந்துள்ளன. இந்த கொலைகள் 2025-ல் 93 ஆக குறைந்துள்ளது. அதுவும் திடீர் உணர்ச்சி வசப்படுதல், தவறான உறவு, பணம் ஏமாற்றியது, இடப்பிரச்சினை, மதுபோதையில் சண்டையிடுதல் போன்ற காரணங்களால் நிகழ்ந்துள்ளது. புதிதாக தொடங்கப்பட்ட ஒருங்கிணைந்த தொடர் நடவடிக்கைகளால் ரவுடி கொலைகள் நடக்காமல் தடுக்கப்பட்டது.

மேலும், கடந்த 2 ஆண்டுகளை ஒப்பிடுகையில், 2025-ம் ஆண்டு சென்னையில் வழிப்பறி, திருட்டு, செல்போன் பறிப்பு சம்பவங்கள் மற்றும் வாகன திருட்டுகளும் வெகுவாகக் குறைந்துள்ளன. 2023-ல் 325, 2024-ல் 256 வழிப்பறி நடைபெற்றிருந்த நிலையில் 2025-ல் 180 வழிப்பறி மட்டுமே நிகழ்ந்துள்ளது.

இந்த காலக்கட்டத்தில் 424 மற்றும் 310 செயின் மற்றும் செல்போன் பறிப்பு வழக்குகள் பதிவாகி இருந்த நிலையில் அது 2025-ல் 206 ஆக குறைந்துள்ளது. மேலும், இதே காலக்கட்டத்தில் 1,750 மற்றும் 1,486 ஆக இருந்த வாகன திருட்டுகள் 2025ல் 1,092 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

குண்டர் சட்டம்: தொடர் குற்றச் செயலில் ஈடுபட்டதாக 2023-ல் 714 பேரும், 2024-ல் 1,302 பேரும் குண்டர் தடுப்புக் காவலில் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், 2025-ல் 540 ரவுடிகள், 125 திருட்டு வழக்கு குற்றவாளிகள், 348 போதைப்பொருள் குற்றவாளிகள் உள்பட 1,092 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனால் குற்றவாளிகளின் தொடர் குற்ற செயல்பாடுகள் முற்றிலும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும், 2025-ம் ஆண்டு 66 போக்சோ வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு நீதிமன்ற விசாரணை மூலம் கடும் தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது.

மத்திய குற்றப்பிரிவு: 2025-ல் 661 வழக்குகள் பதிவு செய்யப்பட்டும், விசாரணையில் நிலுவையில் இருந்த 410 வழக்குகளின் விசாரணையை முடித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த காலகட்டத்தில் 601 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் பிற மாநிலங்களில் இருந்து தொடர் நடவடிக்கைகளின் மூலம் 16 இணையக் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், நீதிமன்றங்களால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 747 பேர் கைது செய்யப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் பொது மக்களிடமிருந்து 6,175 மனுக்கள் பெறப்பட்டு விசாரித்து, அவற்றில் 5,474 மனுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குற்றச் சம்பவங்களில் சுமார் ரூ.886 கோடியே 53 லட்சத்து 18,744 சொத்துக்கள் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.459 கோடியே 74 லட்சத்து 69,167 மதிப்புள்ள அசையாச் சொத்துக்கள் பாதிக்கப்பட்டவர்களிடம் உரிய முறையில் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சைபர் கிரைம்: 2025-ல் சைபர் குற்றவாளிகள் 177 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு, ரூ.34 கோடியே 74 லட்சத்து 48,243 மீட்கப்பட்டு, பாதிக்கப்பட்ட 1,389 பேருக்கு திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. சென்னை போலீஸாரின் திறன் மிகுந்த பணியே இதற்கு காரணம் என்று காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.

Police Commissioner Arun
கொல்கத்தா ‘ஐ-பேக்’ அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனை: மம்தா பானர்ஜி கடும் கண்டனம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in