‘நீட்’டுக்கு எதிரான தி.க. மோட்டார் சைக்கிள் பேரணிக்கு அனுமதி: உயர் நீதிமன்றத்தில் காவல் துறை உறுதி

‘நீட்’டுக்கு எதிரான தி.க. மோட்டார் சைக்கிள் பேரணிக்கு அனுமதி: உயர் நீதிமன்றத்தில் காவல் துறை உறுதி
Updated on
1 min read

சென்னை: நீட் தேர்வுக்கு எதிராக திராவிடர் கழகத்தினரின் மோட்டார் சைக்கிள் பேரணிக்கு நாளை அனுமதி வழங்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல் துறை உறுதி அளித்துள்ளது.

நீட் தேர்வுக்கு எதிராக திராவிடர் கழகத்தினரின் மோட்டார் சைக்கிள் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து, திராவிடர் கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி.லட்சுமிநாரயணன், பேரணி குறித்த விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மூத்த வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி பேரணி குறித்த விவரங்களை தாக்கல் செய்தார்.

மேலும், திருநெல்வேலியில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் ‘எதிர் நீச்சலில் வென்ற பெரியார் 80-வது ஆண்டு விழா’வை முன்னிட்டு குளப்பிரையில் மாநாடு நடத்த காவல் துறையால் அனுமதி மறுக்கப்பட்டதாக முறையிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ஏன் அனுமதி மறுக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து மாநாடுக்கு அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக காவல் துறை இன்று விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்திருந்தார்.

வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது மூத்த வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன் ஆஜராகி திருநெல்வேலி மாநாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுவிட்டதாகவும் குறிப்பிட்டார்.

காவல் துறை தரப்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்தியன், மோட்டார் சைக்கிள் பேரணிக்கு நாளை அனுமதி வழங்கப்படும் என உறுதி அளித்தார். இதையடுத்து வழக்கு விசாரணையை நீதிபதி நாளை ஒத்திவைத்துள்ளார்.

‘நீட்’டுக்கு எதிரான தி.க. மோட்டார் சைக்கிள் பேரணிக்கு அனுமதி: உயர் நீதிமன்றத்தில் காவல் துறை உறுதி
முதலமைச்சர் மருத்துவக் காப்பீடு தொகை ரூ.25 லட்சமாக உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in