

பாமக நிறுவனர் ராமதாஸ்
சென்னை: ‘தீய சக்திகளுக்கும், துரோகம் இழைத்தவர்களுக்கு பாடம் புகட்ட கிடைத்த வெற்றி’ என தேர்தல் வாக்குப் பதிவு குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘நடந்து முடிந்த தேர்தலில் ஜனநாயகக் கடமையை ஆற்றி, தமிழகத்தின் முன்னேற்றத்துக்காக தங்கள் வாக்குகளை பதிவு செய்த வாக்காளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.
தமிழக அரசியலில் அறத்தையும், நீதியையும் குழிதோண்டிப் புதைக்க நினைக்கும் தீய சக்திகளுக்கும், துரோகத்தை ஆயுதமாக கொண்டவர்களுக்கும் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்ற உழைக்கும் மக்களின் எண்ணத்துக்கு கிடைத்த வெற்றியாகவே இந்த தேர்தலை பார்க்கிறேன்.
சமூக நீதிக்காக வாழ்நாள் முழுவதும் போராடி வரும் எனது வேண்டுகோளை ஏற்று, நான் கைகாட்டிய வேட்பாளர்களுக்கு ஆதரவு தந்து வெற்றிக்கு வித்திட்ட வாக்காளர்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன்.
மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. நீங்கள் வழங்கிய இந்த பேராதரவு எங்களை மேலும் உத்வேகத்துடன் மக்கள் பணியாற்ற தூண்டுகிறது. வெற்றி, தோல்விகளுக்கு அப்பால், பாமக எப்போதும் தமிழக மக்களின் உரிமைகளுக்காகவும், சமூக நீதிக்காகவும், மாநில முன்னேற்றத்துக்காகவும் தொடர்ந்து சமரசமின்றி குரல் கொடுக்கும்.
அதேபோல் வேட்பாளர்களின் வெற்றிக்காக களத்தில் இரவு பகல் பாராமல் உழைத்த பாமக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளின் அர்ப்பணிப்பு அளப்பரியது. ஜனநாயகத்தைக் காக்கப் போராடிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றிகளை சமர்ப்பிக்கிறேன்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.