

திருச்சியில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில் ரு.5,655 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி. உடன், மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், எல்.முருகன், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு, பாஜக சட்டப்பேரவைக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன்.
திருச்சி: திருச்சியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், ரூ.5,655 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்டங்களைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது, ‘‘மேம்பட்ட இந்தியா, தமிழ்நாட்டை உருவாக்குவதுதான் எங்கள் இலக்கு’’ என்று பிரதமர் மோடி உறுதியாக கூறினார்.
கேரள மாநிலம் கொச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிரதமர் மோடி, நேற்று மாலை திருச்சி வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பின்னர் திருச்சியை அடுத்த பஞ்சப்பூரில் நேற்று மாலை நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று ரூ.5,655 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்.
சென்னை மணலியில் உள்ள இந்தியன் எண்ணெய் நிறுவனத்தின் சார்பில் ரூ.490 கோடியில் மசகு எண்ணெய் தயாரிப்பு ஆலையை (நவீன லூப் ப்ளெண்டிங் ஆலை) நாட்டுக்கு அர்ப்பணித்தார். நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் 9 லட்சம் வீடுகளுக்கு ரூ.3,685 கோடி மதிப்பில் குழாய் மூலம் எரிவாயு விநியோகம் செய்யும் திட்டத்துக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.
நெடுஞ்சாலைகள் மற்றும் கிராமப்புற இணைப்புகள் துறை சார்பில் பிரதமர் கிராம சடக் யோஜனா திட்டத்தில் ரூ.300 கோடியில் 307 கி.மீ. கிராமப்புற சாலைகளைப் பிரதமர் திறந்து வைத்தார். தேசிய நெடுஞ்சாலை 81-ல் கல்லகம் மீன்சுருட்டி- கங்கைகொண்ட சோழபுரம் வரை 7 கி.மீ. தொலைவுக்கு ரூ.183 கோடியில் தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணியையும் அவர் தொடங்கினார்.
ரயில்வே துறையில் நாகர்கோவில் - சர்லாபள்ளி அம்ரித் பாரத் விரைவு ரயில், போத்தனூர் (கோவை) - தன்பாத் அம்ரித் பாரத் விரைவு ரயில், ராமேசுவரம்- மங்களூரு விரைவு ரயில், திருநெல்வேலி - மங்களூரு விரைவு ரயில், மயிலாடுதுறை- திருவாரூர் - காரைக்குடி ரயில் ஆகிய 5 ரயில் சேவைகளை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: இந்த நிகழ்ச்சி தமிழக எதிர்காலத்துக்கு முக்கியமான ஒன்று. ரூ.5,655 கோடி மதிப்பிலான இந்தத் திட்டங்கள் தூய்மையான எரிசக்தி, பெட்ரோல் தொடர்பான தயாரிப்பு, நெடுஞ்சாலைகள், ரயில்வே துறை, ஊரகப் பகுதி சாலைகள் தொடர்பா னவை. இதனால், தமிழகத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர் களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் நகர எரிவாயு பகிர்மான கட்டமைப்பின் ரூ.3,700 கோடி மதிப்பிலான திட்டம், ஈரோடு - நீலகிரி மாவட்ட மக்களுக்கு பயனளிக்கும். ஒன்பது லட்சம் குடும்பங்களுக்கும், நூற்றுக்கணக்கான வர்த்தக நிறுவனங்களுக்கும் குழாய் வழி இயற்கை எரிவாயு கொண்டு சேர்க்கும். இயற்கை எரிவாயு, காற்று மாசை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும். எட்டு ஆண்டு காலத்தில் இந்த திட்டத்தால் சுற்றுச்சூழலும், காற்றும் 4 கோடி மரங்கள் நடுவதற்கு சமமானது.
மணலியில் அர்ப்பணிக்கப்பட் டுள்ள மசகு எண்ணெய் ஆலை, உலகில் மிகப்பெரிய ஆலைகளில் ஒன்றாக உள்ளது. இது உள்ளூர் மட்டத்திலான தயாரிப்புகளை அதிகரிப்பதுடன், இறக்குமதியை குறைத்து தேசத்தின் பணத்தை சேமிக்கிறது. தற்போது தொடங்கி வைக் கப்பட்டுள்ள ஊரக பகுதி சாலைகளால் கிராமப்புற மக்கள் கல்வி, மருத்துவம், விவசாயிகள் விளைப் பொருட்களை ஏற்றிச் செல்ல உதவும்.
கடந்த ஆண்டு ஆடித் திருவாதிரை விழாவுக்காக கங்கை கொண்ட சோழபுரம் வந்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. மாமன்னர் ராஜேந்திர சோழன் எழுப்பிய மகத்தான ஆலயத்தின் கட்டுமானத்தின் ஆயிரமாவது ஆண்டு தொடக்கத்தை கொண்டாடினோம்.
இது யுனெஸ்கோ அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட இடம். தற்போது அங்கு நெடுஞ்சாலைக்கான அடிக்கல் நாட்டியுள்ளோம். தற்போதுள்ள நெடுஞ்சாலை ஆலயத்தின் அருகில் இருப்பதால் பக்தர்களுக்கும், சுற்றுலா பயணிகளுக் கும் இடையூறாக உள்ளது. எனவே, இந்த புதிய சாலை அதற்கு தீர்வாக அமையும்.
கடந்த வாரம் மதுரை வந்த போது அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் 8 நவீன மறுவடிவமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை தொடங்கி வைத்தேன். இன்று பல புதிய ரயில் சேவைகள் தொடங்கி வைத்துள்ளேன்.
இதன் மூலம் சுற்றுலா துறை மேம்படுவ துடன் உள்ளூர் பொருளாதாரத்துக்கு ஊக்கமளிக்கப்பட்டு, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். மேம்பட்ட இந்தியாவை உருவாக்க, மேம்பட்டதொரு தமிழ்நாட்டை உருவாக்குவதுதான் எங்கள் இலக்கு. தமிழக மக்கள் நலனுக்கு முழு அர்ப்பணிப்போடு மத்திய அரசு செயல்படுகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
முன்னதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வர வேற்று பேசியது: பிரதமர் மோடி வரும் போதெல்லாம் ரூ.6,000 கோடி நிதியிலான திட்டங்களை தமிழகத்துக்கு அர்ப்பணித்து வருகிறார். கடந்த 1-ம் தேதி தமிழகம் வந்த பிரதமர் மோடி ரூ.5,600 கோடிக்கான திட்டங்களையும், இன்று ரூ.5,655 கோடி மதிப்
புள்ள திட்டங்களையும் வழங்கி உள்ளார். கடந்த 12 ஆண்டுகளில் ரூ.13 லட்சம் கோடியை தமிழக வளர்ச்சிக்கு பிரதமர் மோடி கொடுத்துள்ளார். தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலாச்சாரம், இலக்கியம், திருவள்ளுவரை உலகம் முழுவதும் கொண்டு சென்ற பெருமை பிரதமர் மோடியை சாரும். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, பாஜக சட்டப்பேரவைக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன், திருச்சி ஆட்சியர் வே.சரவணன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.