

சென்னை: காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனுபவம் குறித்து உணர்ச்சிகரமாக கடிதம் எழுதிய தமிழக மாணவருக்கு, பிரதமர் மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
திருச்செங்கோட்டைச் சேர்ந்த மாணவர் பிரகாஷ் பழனிவேல், மத்திய கல்வி அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்றார். 2025 நவ. 29 முதல் டிச.7 வரை நடைபெற்ற நிகழ்வுகளில் பங்கேற்ற அவர், தனது அனுபவங்களை பிரதமருக்கு கடிதமாக எழுதியிருந்தார்.
அந்த கடிதத்தில், பழங்காலத் தமிழ் நாகரிகத்தையும், காசியின் காலத்தால் அழியாத தொன்மையான ஆன்மிக மரபையும் அழகாக இணைத்து, கருத்து தெரிவித்திருந்தார். மேலும், தொல்காப்பியம், பாரதியாரின் கவிதைகள் ஆகியவற்றில் இருந்தும் மேற்கோள் காட்டிஇருந்தார்.
காசியை பாரத மாதாவின் கழுத்து ஆபரணமாகவும், தமிழகத்தை வெள்ளிக் கொலுசாகவும் சித்தரித்து எழுதியிருந்தார். இரண்டும் வெவ்வேறானவை என்றாலும், ஒரே ஆன்மிகஉடலின் பிரிக்க முடியாத பகுதிகள் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். காசி ஹனுமான் படித்துறையில், கங்கை நதிக்கரையில் ஒரு
மூதாட்டியுடன் ஏற்பட்ட அமைதியான சந்திப்பு குறித்தும் நெகிழ்வுடன் குறிப்பிட்டிருந்தார். மொழி புரியாவிட்டாலும், தீபம், புன்னகை, பிரார்த்தனை மூலம் ஆழமான ஒற்றுமை உணர்வு ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
பக்தி என்பது மொழிக்கு அப்பாற்பட்டது என்றும், வட இந்தியாவுக்கும், தென்னிந்தியாவுக்கும் இடையிலான ஆழமான பிணைப்பை இந்நிகழ்வு பிரதிபலிப்பதாகவும் அந்த மாணவர் விவரித்திருந்தார். அந்தக் கடிதத்துக்குப் பதில் அளித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, மாணவரின் பயணம் குறித்தும், காசியில் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்தும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மாணவர் பிரகாஷ் இயற்றிய கவிதை ஆழமாக நெஞ்சைத் தொடுகிறது என்றும் பாராட்டிஉள்ளார்.
காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்வு, தமிழ் மொழி, தமிழகத்தின் செழுமையான கலாச்சாரம், காசியுடனான அதன் வரலாற்றுத் தொடர்பு ஆகியவற்றைக் கொண்டாடும் துடிப்பான தளமாக மாறியுள்ளது என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய பங்கேற்பின் மூலம், பிரகாஷ் பழனிவேல் போன்ற மாணவர்கள் ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்ற உணர்வை உயர்த்திப் பிடிப்பவர்களாக மாறியுள்ளனர் என்று தெரிவித்துள்ள பிரதமர், காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்வில் இளைஞர்களின் உற்சாகமான பங்கேற்பைப் பாராட்டியுள்ளார்.
காசி தமிழ்ச் சங்கமம் மீதான மாணவரின் பற்றுக்கும், ஆதரவுக்கும் நன்றி தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இதுபோன்ற ஆக்கப்பூர்வமான கருத்துகள், நாடு முழுவதும் கலாச்சாரப் பிணைப்புகளை மேலும் வலுப்படுத்தத் தன்னை ஊக்குவிப்பதாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.