

மதுரையில் நடைபெற்ற அரசு விழாவில் நான்கு வழிச்சாலை திட்டங்களுக்கு அடிக்கல், மறுசீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்கள் திறப்பு உள்பட பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். உடன் ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணை அமைச்சர் முருகன், அமைச்சர் எ.வ.வேலு, எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்.
மதுரை: தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் ரயில்வே திட்டங்களுக்கானநிதி ஒதுக்கீடு 9 மடங்கு அதிகரித்துள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் - புதுச்சேரி நான்கு வழிச்சாலை, பரமக்குடி - ராமநாதபுரம் நான்கு வழிச்சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா, பொம்மிடி, காரைக்குடி, மணப்பாறை, மொரப்பூர், பொள்ளாச்சி, சோழவந்தான், ஸ்ரீவில்லித்புத்தூர், திருவாரூரில் மறுசீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்கள் திறப்பு விழா, சென்னை கடற்கரை- எழும்பூர் 4-வது ரயில் வழித்திட்டத்தை நாட்டுக்கு அர்பணிக்கும் விழா ஆகியவை மதுரையில் நேற்று நடைபெற்றது.
இத்திட்டங்களைத் தொடங்கிவைத்து பிரதமர் பேசியதாவது: புனிதமான மதுரை மாநகருக்கு வருவதை பெரும் கவுரவமாக கருதுகிறேன். மதுரையை ஆட்சி செய்யும் மீனாட்சி அம்மனுக்கும், சுந்தரேசுவரருக்கும் தலை வணங்குகிறேன். இந்த விழா தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் முக்கியமானது.
ரூ.4,500 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைத்துள்ளேன். கடந்த 12 ஆண்டுகளாக தமிழக நெடுஞ்சாலை வளர்ச்சிக்கு மத்திய அரசு அதிக நிதி ஒதுக்கி வருகிறது. தமிழகத்தில் 2014-ம் ஆண்டிலிருந்து தற்போது வரை 4,000 கி.மீ. தூரத்துக்கு புதிய சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று 2 பெரிய தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
மரக்காணம் - புதுச்சேரி நான்கு வழிச்சாலை திட்டத்துக்கு ரூ.2,100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தால் தமிழ்நாடு - புதுச்சேரி கடற்கரைப் பகுதியில் சுற்றுலா, வர்த்தகம், பொருளாதாரம் மேம்படும். பரமக்குடி - ராமநாதபுரம் நான்கு வழிச்சாலை திட்டத்துக்கு ரூ.1,800 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தச் சாலையால் ராமேசுவரத்துக்கு புனிதப் பயணம் மேற்கொள்வோர், விவசாயிகள், கடல்சார் பொருட்களின் போக்குவரத்து மேம்படும். தமிழக ரயில்வே திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்பு 9 மடங்கு அதிகரித்துள்ளது. 2009 முதல் 2014 வரை நிதி ஒதுக்கீடு ரூ.880 கோடியாக இருந்தது.
2026- 2027-ம் நிதியாண்டில் ரூ.7,600 கோடியாக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 1,300 கி.மீ. புதிய ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. 97 சதவீத மின்மயமாக்கல் பணிகள் முடிவடைந்துள்ளன. கடந்த ஆண்டு பாம்பன் புதிய ரயில் பாலம் திறக்கப்பட்டது. தமிழகத்தில் தற்போது 9 வந்தே பாரத், 9 அம்ரித் பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களின் பெட்டிகள் சென்னையில் தயாரிக்கப்படுகின்றன.
இதனால் ஏராளமான இளைஞர்கள் வேலைவாய்ப்பைப் பெறுகின்றனர். அம்ரித் திட்டத்தில் 77 ரயில் நிலையங்கள் நவீனப்படுத்தப்படுகின்றன. கும்பகோணம், ஏற்காடு, வேலூர் ஆகாசவாணி புதிய பண்பலை நிலையங்கள் மக்கள் சேவைக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. தமிழக உள் கட்டமைப்புக்கான நிதி ஒதுக்கீடு 3 மடங்கு அதிகரித்துள்ளது. 2026 மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
அந்த பட்ஜெட்டில் சென்னை - பெங்களூரு, சென்னை - ஹைதராபாத் புல்லட் ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டது. தமிழ்நாடு வளமான வரலாறு மற்றும் மரபுக்குச் சொந்தமான மாநிலம். உலக அளவில் வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாக ஆதிச்ச நல்லூர் மாற்றப்படும். புலிகாட் ஏரி, பொதிகை மலைப்பகுதியில் சுற்றுச்சூழல் முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படும்.
நாடு முழுவதும் 200 தொழில்துறை தொகுப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. உற்பத்திப் பணிகள் ஊக்குவிக்கப்படும். இதில் தமிழகத்திலும் பல்வேறு தொழிற்சாலைகள் உள்ளன.
இதனால் தமிழக இளைஞர்கள் பலனடைவார்கள். 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற உணர்வில் ஒவ்வொரு இந்தியரும் உள்ளனர். நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் தமிழ்நாடு முக்கியப் பங்காற்றும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
முன்னதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசும்போது, ‘பிரதமர் மோடி தமிழக மக்கள், தமிழ் மொழி, கலாச்சாரத்தின் மீது அதிக பற்று வைத்துள்ளார். இதனால்தான் உலகம் முழுவதும் திருக்குறள் கலாச்சார மையம் திறந்து வருகிறார். திருக்குறளை 35-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி பெயர்க்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதுவரை தமிழகத்துக்கு ரூ.12 லட்சம் கோடி நிதியை வழங்கியுள்ளார்’ என்றார். இந்நிகழ்வில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் எ.வ.வேலு, அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.