

போலீஸாரால் கைது செய்து அழைத்துச் செல்லப்படும் பி.எம்.மன்னன். விசாரணைக்கு அழைக்கப்பட்ட தவெக எம்எல்ஏ முஸ்தபாவின் உதவியாளர் கனிராஜ். படங்கள்: நா.தங்கரெத்தினம்
மதுரை: தவெக எம்எல்ஏ முஸ்தபாவிடம், ஆட்சிக்கு எதிராக வாக்களிக்க ரூ.30 கோடி குதிரை பேரம் நடத்தியதாக அளிக்கப்பட்ட புகாரில் அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளரும், மாநகராட்சி முன்னாள் துணை மேயருமான பி.எம். மன்னனை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை சொந்த ஜாமீனில் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மதுரை மத்திய தொகுதி தவெக எம்எல்ஏ முஸ்தபா சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசியபோது, “தவெக வெற்றி பெற்று நல்லாட்சி தருவதைக் கெடுக்க திமுகவும், அதிமுகவும் முயற்சி செய்கின்றன. திமுகவும் அதிமுகவும் மீண்டும் குதிரை பேரத்தில் ஈடுபடுகின்றன.
என்னை தொடர்புகொண்ட அதிமுக பிரமுகர், ‘நீங்கள் முதலில் ரூ.15 கோடி வாங்கிக் கொள்ளுங்கள், தவெக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வரும்போது, அரசுக்கு எதிராக வாக்களித்த பின்னர் மேலும் ரூ.15 கோடி வாங்கிக் கொள்ளுங்கள்’ என பேரம் பேசினர்” என பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இந்த பேரத்தின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பது குறித்த தொலைபேசி உரையாடல் ஆடியோ ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும், அவற்றை விரைவில் வெளியிடுவதாகவும் முஸ்தபா தெரிவித்திருந்தார்.
எம்எல்ஏ முஸ்தபாவின் குற்றச்சாட்டு அடிப்படையில் அவரது உதவியாளர் கனிராஜ் அளித்த புகாரின்பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து, மதுரை மாநகராட்சி முன்னாள் துணை மேயர் பி.எம்.மன்னனை கைது செய்தனர். முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு நெருக்கமான இவர், சட்டப்பேரவை தேர்தலுக்கு 2 மாதங்களுக்கு முன்புதான் அதிமுகவில் சேர்ந்தார். மதுரை விஸ்வநாதபுரம் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் மன்னனிடம் காவல் துணை ஆணையர் திவ்யா, உதவி ஆணையர்கள் ஆரோக்கியராஜ், செல்வக்குமார் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
இதே வழக்கு தொடர்பாக புகார் அளித்த எம்எல்ஏவின் உதவியாளர் கனிராஜிடமும் விசாரணை மேற்கொண்டனர். அவரிடம், மன்னன் குதிரை பேரம் தொடர்பாக பேசியதாக கூறப்படும் ஆடியோ ஆதாரங்களை கேட்டு விசாரித்தனர். மன்னன் மட்டும் எம்எல்ஏ முஸ்தபா தரப்பினரிடம் பேரம் பேசினாரா? இதன் பின்னணியில் இருந்தவர்கள் யார்? பணப் பரிவர்த்தனைக்கான ஏற்பாடு செய்யப்பட்டதா என்பது குறித்தும் நேற்று காலை 6 மணி முதல் 4 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.
மன்னனை விசாரணைக்கு அழைத்ததை அறிந்த முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், அதிமுக அமைப்புச் செயலாளர் வி.வி. ராஜன் செல்லப்பா தலைமையில் அதிமுகவினர் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் திரண்டனர். அவர்கள் மன்னனை சந்தித்து பேசினர்.
சிறையில் அடைக்க மறுப்பு: விசாரணைக்குப் பிறகு மன்னனை மருத்துவ பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அழைத்துச் சென்றனர். பின்னர் அவரை நேற்று இரவு மதுரை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மன்னன் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகி “இவ்வழக்கில் இன்று (நாளை) விசாரணைக்கு ஆஜராகும்படி, 5-ம் தேதி சம்மன் அனுப்பியுள்ளனர்.
ஆனால், ஒரு நாளுக்கு முன்னதாகவே போலீஸார் அவரை கைது செய்துள்ளனர். இது உயர், உச்ச நீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிரானது. எனவே, அவரை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும்” என்றனர். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஜோசப் ஜாய், மன்னனை சிறையில் அடைக்க மறுத்து அவருக்கு சொந்த ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.