

சென்னை: அதிமுகவின் 2 கோடி தொண்டர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை எடப்பாடி பழனிசாமி ஒருமுறை காது கொடுத்துக் கேட்க வேண்டும் என்று அக்கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் நேற்று (நவ. 21) செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம், அமைச்சர் செங்கோட்டையனும், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் திருமண விழாவில் ஒன்றாக இருந்தது தொடர்பாக கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, ‘‘அந்த வீடியோவை நீங்களே வெளியிட்டு உள்ளீர்கள். கட்சியில் இருந்து வெளியேறிவர்கள் குறித்து அந்தந்த கட்சியினரிடம்தான் கேள்வி எழுப்ப வேண்டும். அதிமுகவின் 2 கோடி உறுப்பினர்களில் எஸ்.பி.வேலுமணியும் ஒருவர். அவரை பற்றி இங்கு கேள்வி எழுப்ப வேண்டாம்’’ என தெரிவித்திருந்தார்.
அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. வேலுமணியை, தொண்டர்களில் ஒருவர் என எடப்பாடி பழனிசாமி கூறியது அவர்களுக்குள் இருக்கும் மோதல் போக்கை வெளிப்படுத்துவதாக இருந்தது.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியின் இந்த கருத்துக்கு எஸ்.பி. வேலுமணி பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில், “என்னை உதாசீனப் படுத்துவதாக எண்ணி அவர்(எடப்பாடி பழனிசாமி) சொல்லி இருந்தாலும், இதை விட எனக்கு வேறென்ன பெருமை இருக்கப் போகிறது?
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டன் என்பது தான் என்னுடைய முதல் அடையாளம். இந்த இயக்கத்தின் கொடிபிடிக்கும் தொண்டன் என்பதை விட வேறு எந்தப் பதவியும் எனக்கு பெரிதல்ல.
என்னை தொண்டரில் ஒருவன் என்று சொன்ன கழகப் பொதுச் செயலாளருக்கு நன்றி. இந்த 2 கோடித் தொண்டர்களால் கொண்டுவரப்பட்டு தான் தாங்கள் இன்றைக்கு பொதுச் செயலாளர் பொறுப்பில் உள்ளீர்கள்.
கொடிபிடிக்கும் அந்த தொண்டன் தான் இந்த இயக்கத்தின் ஆணிவேர். அவன் ஆடினால் இந்த இயக்கம் ஆடும். அந்த தொண்டன் ஒரு முடிவை எடுத்துவிட்டால்… என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அதை ஒரு நல்ல தலைமை உணர வேண்டும்.
ஒவ்வொரு தொண்டனின் குரலையும் கேட்பது தான் ஒரு தலைமைக்கு அழகு.
கடைக்கோடி தொண்டன் பத்திரிகை வைத்தால், அந்த கல்யாணத்தில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் இருப்பார். கடைக்கோடி தொண்டனின் குரலுக்கு ஜெயலலிதாவின் கான்வாயே நிற்கும். பொறுப்பில் இருப்பவர்களை விட, இயக்கத்தை உயிராய் நேசித்த அந்த அடிப்படைத் தொண்டனைத் தான் நம் தலைவர்கள் அதிகம் நேசித்தார்கள்; மதித்தார்கள்!
“இந்த இயக்கத்தை நேசிக்கும் எல்லோரும் எந்த பிரிவினையும் இல்லாமல் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்” என்று சொல்வது வேலுமணி என்கிற ஒரு தொண்டன் மட்டுமா? இல்லையே - 2 கோடி தொண்டரில் யாரைக் கேட்டாலும் இதைத் தான் சொல்வார்கள்.
வி.கே. சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் தனி இயக்கம் ஆரம்பிக்கும் முன் பலமுறை நம் கழகத்தில் இணைந்து பணியாற்ற முன்வந்தார்கள்.
முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் R. வைத்திலிங்கம் ஆகியோர் திமுக-வுக்கு செல்லும் முடிவை எளிதாக எடுக்கவில்லை. அதற்கு முன் பலமுறை தங்களை ஆளாக்கிய இந்த இயக்கத்தில் பயணிக்க வேண்டும் என்று பல முயற்சிகளை எடுத்தார்கள்.
அதேபோல், இன்றைக்கு அமைச்சராக இருக்கும் கே.ஏ. செங்கோட்டையன், பேரவைத் தலைவராக உள்ள ஜே.சி.டி. பிரபாகர் உள்ளிட்ட பலர் கழகத்தில் இணைந்து பயணிக்க பலமுறை முயற்சி எடுத்தும், நீங்கள் ஒரே ஒருவர் ஒப்புக்கொள்ளாமல் விடாப்பிடியாக இருந்ததால் தான் அவர்கள் எல்லாம் தமிழக வெற்றிக் கழகத்துக்கு சென்றார்கள்.
இப்படி, தங்களுக்கு அடையாளம் கொடுத்த இயக்கத்தை விட்டுக்கொடுக்காமல் வந்தவர்களை, எப்போதும் போல உதாசீனப் படுத்தி அனுப்பிவைத்ததால் தான் இன்றைக்கு இந்த நிலைமையில் இருக்கிறோம் என்பதை ஒருகணம் உணர வேண்டும்.
பொதுச் செயலாளர் அவர்களிடம் எப்போதும் நான் கேட்பது ஒன்றுதான் - வேலுமணி உள்ளிட்ட அந்த 2 கோடி தொண்டர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்று ஒருமுறை காது கொடுத்துக் கேளுங்கள்.
தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே!” என தெரிவித்துள்ளார்.