

சென்னை உயர் நீதிமன்றம்
மதுரை: இந்து மாதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்துக்கு மாறியவர்களை பிசி, எம்பிசி, சீர்மரபினர் பட்டியலில் இருந்து நீக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மதுரை மாவட்டம் மேலூர் தெற்கு தெருவைச் சேர்ந்த கோடீஸ்வரன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: நான் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த கள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர். டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு பிசி பிரிவில் விண்ணப்பித்தேன். அரசுப் பணியில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் பல்வேறு கிறிஸ்தவப் பிரிவினருக்கும், மதம் மாறியவர்களுக்கும் பணி வழங்கப்படுகிறது. இவர்கள் அரசியலமைப்புச் சட்டப்படி சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய நிலையை உறுதிப்படுத்த எந்த ஆய்வுக்கும் உட்படுத்தப்படாமல் பிசி பிரிவினராக கருதப்படுகின்றனர்.
எனவே, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் (பணி நிபந்தனைகள்) சட்டம் 2016-ன் இணைப்பு 1 பகுதி ஏ-யில் இருக்கும் கிறிஸ்தவ நாடார், கிறிஸ்தவ சாணார் மற்றும் கிறிஸ்தவ கிராமணி, பகுதி சி-யில் உள்ள மீனவர், பர்வதராஜகுலம், பட்டினர் மற்றும் செம்படவர் சமூகங்களிலிருந்து கிறிஸ்தவ மதத்துக்கு மாறியவர்கள், முக்குவர் அல்லது முக்கையர் சமூகங்களிலிருந்து கிறிஸ்தவ மதத்துக்கு மாறியவர்களை பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர் மரபினர் பட்டியலிலிருந்து நீக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், எம்.டி.சுமதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் தரப்பில் ஒரு பிராமணர் மதம் மாறி 'சிஎஸ்ஐ' பிரிவில் சேர்ந்தால், தற்போதைய சட்டக் கட்டமைப்பு அடிப்படையில் அவர் ஓபிசி அந்தஸ்து பெற வேண்டும் என அதிர்ச்சியூட்டும் தகவலை தெரிவித்தார். இது உண்மையானால் இதை தீவிரமாக மறுபரிசீலனை செய்ய வேண்டியது அவசியம். இந்த வழக்கு தமிழகத்தில் இட ஒதுக்கீடு தொடர்பான சட்டக் கோட்பாடுகளின் அடித்தளத்தை கேள்விக்குள்ளாக்கும் மிக முக்கியமான அரசியலமைப்புச் சட்ட விவாதங்களை எழுப்பியுள்ளது.
அரசியலமைப்பின் 16(4)-வது பிரிவு, அரசுப் பணிகளில் போதிய பிரதிநிதித்துவம் பெறாத பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்தோருக்கு மட்டுமே இட ஒதுக்கீடு வழங்க அனுமதிக்கிறது. மதம் மாறுவது ஒரு புதிய பிறப்பு சார்ந்த சமூக அடையாளத்தை உருவாக்கிவிட முடியாது. ஒரு நோக்கத்துக்காக பழைய சாதி அடையாளத்தை நீக்கிக்கொண்டு, மற்றொரு நோக்கத்துக்காக வேறொரு சமூக அடையாளத்தைப் பெற்றுக்கொள்ளும் வகையில் இதை பயன்படுத்த முடியாது என உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில் கூறியுள்ளது.
சிஎஸ்ஐ என்பது சுமார் 4 மில்லியன் உறுப்பினர்களைக் கொண்ட மிகப்பெரிய மத நிறுவனம். இது 'சினோட்' அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது. பெரும் சொத்துகளைக் கொண்டுள்ளது. 2024-25 நிதியாண்டில் இதன் வருவாய் ரூ.3,067 கோடிக்கும் அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது.
சுருக்கமாகச் சொன்னால் முன்னேறிய வகுப்பைச் சேர்ந்த யாரும் ஞானஸ்நானம் பெற்று சிஎஸ்ஐ-யில் சேர்ந்து 'பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்' என சான்று பெற முடியும் நிலைதான் உள்ளது. இது, சட்டப்பூர்வ இட ஒதுக்கீடு தகுதியைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை ஒரு மத அமைப்பிடம் ஒப்படைப்பதற்கு சமமாகும். சட்டப்பூர்வ தகுதியைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை ஒரு மத அல்லது சமூக அமைப்பிடம் ஒப்படைக்க முடியாது.
இந்த வழக்கு ஆழ்ந்த அரசியலமைப்புச் சட்ட ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டிய ஒரு வலுவான காரணம் உள்ளது என்பதில் நாங்கள் திருப்தி அடைகிறோம். இதனால், ரிட் மனு ஏற்கப்படுகிறது. மனுதாரர் தரப்பில் தற்போது பணியமர்த்தல் நடைமுறைகள் நடைபெற்று வருவதால் அவசரமாக விசாரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. இதனால், மனுதாரர் தரப்பில் இடைக்கால மனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்படுகிறது. இந்த மனுவுக்கு தமிழக அரசு, டிஎன்பிஎஸ்சி பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பப்படும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.