

சென்னை: ரயில்களின் இயக்கத் திறனை அதிகரிக்கவும், பயண நேரத்தைக் குறைக்கவும் சென்னை - ஹவுரா (கொல்கத்தா) வழித்தடம் உட்பட 7 வழித்தடங்களை (அதி அடர்த்தி வழித்தடங்களை) 4 வழிப்பாதைகளாக விரிவுபடுத்த ரயில்வே திட்டமிட்டுள்ளது.
நாட்டின் ரயில்வே உள்கட்டமைப்பை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை ரயில்வே துறை செயல்படுத்தி வருகிறது. தண்டவாளங்களை மேம்படுத்துவது, ரயில் நிலையங்களின் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவது என பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
இதன் ஒரு பகுதியாக, நாட்டின் மிக பரபரப்பான 11,000 கி.மீ. அதி-அடர்த்தி ரயில் வலைத்தளத்தை (நெட்வொர்க்கை) 4 வழிப்பாதைகளாக மாற்ற ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. இத்திட்டம் மூலம், பயணிகள் ரயில்கள், சரக்கு ரயில்களின் தடையற்ற போக்குவரத்து உறுதி செய்யப்பட உள்ளது.
இதுகுறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறும்போது, “நாட்டின் ஒட்டுமொத்த ரயில் போக்குவரத்தில் பெரும் பகுதியைச் சுமக்கும் 7 வழித்தடங்களும் சேர்ந்து மொத்தம் 11 ஆயிரம் கி.மீ. தூரத்தைக் கொண்டுள்ளன. இது, இந்திய ரயில்வேயின் மொத்த வலைத்தளத்தில் (நெட்வொர்க்கில்) வெறும் 16 சதவீதம் மட்டுமே. ஆனால், நாட்டின் ஒட்டுமொத்த ரயில் போக்குவரத்தில் 41 சதவீதப் போக்குவரத்து நெரிசல் இந்த குறிப்பிட்ட பாதைகளிலேயே நடைபெறுகிறது. இதனால், இந்தபாதைகளை நான்கு வழிப்பாதைகளாக மாற்றுவது அவசியமாகிறது” என்று தெரிவித்தார்.
அதன்படி, நாட்டின் முக்கிய பெருநகரங்களை இணைக்கும் சென்னை - ஹவுரா (கொல்கத்தா), சென்னை - மும்பை, டெல்லி - சென்னை, டெல்லி - ஹவுரா, மும்பை - டெல்லி, மும்பை - ஹவுரா, டெல்லி - குவாஹாட்டி ஆகிய 7 வழித்தடங்கள் இத்திட்டத்தின் கீழ் நான்கு தண்டவாளங்கள் கொண்ட 4 வழிப்பாதைகளாக விரிவாக்கப்பட உள்ளன. இதில் சென்னையை மையமாகக் கொண்டு 3 வழித்தடங்கள் இடம்பெற்றுள்ளன.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: கூடுதல் ரயில் பாதைகள் அமைக்கப்படுவதால், எவ்வித சிக்னல் காத்திருப்பும் இன்றி, தடையின்றி ரயில்
களை இயக்க முடியும். இது தற்போது உள்ள தண்டவாளங்கள் மீதான அதிகப்படியான அழுத்தத்தை குறைக்கும். தற்போதைய பாதைகளில் இடநெருக்கடியால், புதிய ரயில்களை இயக்க முடிவதில்லை. 4 வழிப்பாதையாக மாறும்போது, கூடுதல் வந்தே பாரத் ரயில்கள், வழக்கமான அதிவிரைவு, விரைவு ரயில்களை தாராளமாக இயக்க முடியும்.
ரயில் போக்குவரத்து மூலம் சரக்குகளைக் கொண்டு செல்ல குறைந்த செலவே ஆகும். இது, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பலம் சேர்க்கும். எதிர்காலத்தில் அதிகரிக்க இருக்கும் பயணிகள் மற்றும் சரக்குப் போக்குவரத்தின் மிகப்பெரிய தேவையைச் சமாளிப்பதற்காக இந்த அதிநவீன விரிவாக்கப் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.