

பியூஷ் கோயல்
தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக பியூஷ் கோயலுடன் கூட்டணி கட்சியினர் நேற்று ஆலோசனையில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வதற்காக, பாஜக மேலிடப் பொறுப்பாளர் பியூஷ் கோயல் சென்னை வந்துள்ளார். நேற்று காலை கிண்டி ஓட்டலில் நடைபெற்ற ஆலோசனையில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், அண்ணாமலை ஆகியோர் பங்கேற்றனர். இவர்களுடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர் மற்றும் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சித் தலைவர் திருமாறன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பியூஷ் கோயலைச் சந்தித்துப் பேசினர்.
இந்த ஆலோசனையின் முடிவில், ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதிக் கட்சிக்கு 2 தொகுதிகள் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. அதேபோல், மற்ற கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகளும் இறுதி செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து, முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையும் பியூஷ் கோயலை சந்தித்துப் பேசினார். அப்போது, கோவை மாவட்டத்தின் சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம் தொகுதிகளில் ஏதேனும் ஒன்றை தனக்கு ஒதுக்க வேண்டும் என அண்ணாமலை விருப்பம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
அதேபோல், மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாகவும், அது குறித்தும் விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 27 தொகுதிகளில், அவை எந்தெந்த தொகுதிகள், அதில் யார், யார் போட்டியிடுவது என்பது குறித்து பியூஷ் கோயல் விரிவாக ஆய்வு செய்தார்.
ஏற்கெனவே, பாஜக தரப்பில் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு தயார் நிலையில் உள்ளன. இதில் அதிமுக இறுதி செய்யும் 27 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பியூஷ் கோயல் டெல்லி கொண்டு சென்று கட்சித் தலைமையிடம் சமர்ப்பிக்கவுள்ளார். டெல்லி மேலிடத்தின் ஒப்புதல் கிடைத்தவுடன், அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியல் வெளியாகும் எனத் தெரிகிறது.